Wednesday, February 9, 2011

அத்தகிரியும், அருளாளனும்.

அத்தகிரியும், அருளாளனும்.

புற இருளையும் , அக இருளையும் போக்குவதற்காக அவதரித்தவர்கள் தான் ஆழ்வார்களும், ஆச்சார்யர்களும். ஸ்வாமி தேசிகன் தன் யதிராஜ சப்ததியில் அறிஞர்கள் பெருமாளை அணுகி அவரது திருவடியை பற்றவிரும்பினால் முதலில் ஆழ்வார்கள் திருவடியையும் ஆச்சார்யர்கள் திருவடியையும் பற்றிவிட்டு இங்கே வாரும் என்பார். ஆழ்வார்களோ பகவானை தேனினும் இனிதான பாக்களால் பாடி பாடி தன்னையும் மறந்து பகவானோடு ஐக்கியமாகி விட்டார்கள். ஆச்சார்யர்கள் நம்மிடமே இருந்து அப்பப்போது நம்மை திருத்தி பகவானிடம் சேர்க்கிறார்கள்.கலியுகத்தில் கண்கண்ட தெய்வங்கள் என்று சொன்னால்-அரங்கனும், அருளாலனும், ஆனந்த நிலயத்தில் வீற்றிருக்கும் வேங்கடவனும் தான்- அரங்கனையும், வேங்கடவனையும் நாம் அநுபவித்தாயிற்று. அருள் சுரக்கும் அத்தகிரிக்கு அதிபதியான வரதனிடம் -இம்மையிலும் மறுமயிலும் நமக்கு வாரி வழங்கும்- அருளால பெருமானிடம் தஞ்சம் புகுவோம்.


திருமழிசை ஆழ்வார்- திருச்சந்த விருத்தம்1. பூ நிலாய ஐந்துமாய் புனற்கண்நின்ற நான்குமாய்
தீ நிலாய மூன்றுமாய், சிறந்தகால் இரண்டுமாய்
மீ நிலாய (து) ஒன்றுமாகி வேறு வேறு தன்மையாய்
நீ நிலாய வண்ணம் நின்னை யார் நினைக்க வல்லீரே?

எம்பெருமானே! வரதா! ஐந்து பூதங்களாக-ஒலி, ஊறு, தோற்றம், சுவை, நாற்றம்-இந்த பூமியை படைத்தாய். நாற்றம் நீங்கிய மற்ற நான்கு குணங்கள் கொண்டது- நீர். தீயானது-ஒலி, ஊறு, தோற்றம் ஆகிய முக்குணங்களை கொண்டது. ஒலி, ஊறு இந்த இரண்டையும் கொண்டது காற்று. ஒலி ஒன்றையே கொண்டது ஆகாயம்.இந்த ஐந்து பூதங்களும் உன்னிடமே அடங்க்கி இருக்கின்றன-தேவராகவும், மனித்ராகவும் , விலங்காகவும், தாவரமாகவும் நீயே அதற்கு ஆத்மாவாக இருந்து நடத்தி செல்கிறாய். இப்படி எல்லாவற்றிற்கும் முழுமுதல் காரணப்பொறுளாக உள்ளதை நாம் நினைக்க மறந்துவிடுகிறோம்.

1.த்விரத சிகரி ஸீம்நா ஸத்மவாந் பத்ம யோநே:
துரக ஸவந வேத்யாம் ச்யாமளோ ஹவ்யவாஹ:
கலச ஜலதி கந்யா வல்லரீ கல்ப சாகீ
கலயது குசலம் ந: கோsபி காருண்ய ராசி: //


ஹஸ்தகிரியின் மேற்பகுதியில் உறைவிடம் உடையவனாய் ப்ரம்மாவின் அசுவமேத யாகத்தில் கருமை நிறம் கொண்டவனாய் அக்நியாய் நிற்பவனே! பாற்கடலில் தோன்றிய பிராட்டியோடு கல்பவிருக்ஷமாய் நிற்பவனே! எங்களுக்கு க்ஷேமத்தை அருள வேண்டும்.
ஸ்வாமி தேசிகன்- ஸ்ரீ வரதராஜ பஞ்சாசத்

2. ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி, அல்லவற்று உளாயுமாய்
ஐந்தும் மூன்றும் ஒன்றும் ஆகி, நின்ற தேவனே
ஐந்தும் ஐந்தும் ஐந்துன் ஆகி, அந்தரத்து அணைந்துநிறு
ஐந்துன் ஐந்தும் ஆய நின்னையாவர்காண வல்லரே //


ஆதி தேவனே! பூதங்கள் ஐந்தும், ஞானேந்திரியங்கள் ஐந்தும், கர்மேந்திரியங்கள் ஐந்தும், தன் மாத்திரைகள் ஐந்தும், ப்ரகிரிதி, மகான், அகங்காரம் ஆகிய மூன்றும், மனமாகிய ஒன்றும்- ஆக இருபத்திநாலு தத்துவங்களையும் ஆள்பவனே! அனைத்துக்கும் ஆத்மாவியிருப்பவனே ஐந்து சக்திகள் மற்றும் புலன்கஸ் பத்திலும் புகுந்து நிற்பவனே, ஐந்து-ஒலி, போகஸ்தானம், போகோபகரணம், அமரர், முக்தர் ஆகிய ஐவராய் நின்ற நெடுமாலே-உன்னை யார் அறியவல்லர்?
திருமழிசை ஆழ்வார்- திருச்சந்தவிருத்தம்.
2. ஸ்தோத்ரம் மயா விரசிதம் த்வததீந வாசா
தவத் ப்ரீதயே வரத யத் ததிதம் ந சித்ரம்
ஆவர்ஜயந்தி ஹ்ருதயம் கலு சிக்ஷகணாம்
மஞ் ஜூநி பஞ்ஜா சகுந்த விஜல்பிதாநி //

வரதனான பேரளுளானே! எப்படி கூட்டில் அடைபட்டிருக்கும் கிளியின் மழலை சொற்களை கேட்டு மடந்தை ஆனந்திப்பாளோ அப்படி உன் குழந்தையாகிய, உன்னாலேயே பேச்சு திறன் அடைந்த என் ஸ்தோத்திரம் உனக்கு மழலை போல் தோன்றுவது ஆச்சர்யம் ஒன்றும் இல்லை ?
ஸ்வாமி தேசிகன்- வரதராஜ பஞ்சாசத் //

3. புன்புல வழி அடைத்து அரக்கு இலச்சினை செய்து
நன் புல வழிதிறந்து, ஞான்நற்சுடர்கொளீ இ
என்பில் எள்கி நெஞ்சுருகி உள்கனிந்து எழுந்ததோர்
அன்பில் அன்றி, ஆழியானை யாவர் காணவல்லிரே?

நம் புலன் வழி செல்லும் பாதையை அடைத்து, நல்லதான கடவுள் நெறியை திறந்து ஞான விளக்கை ஏற்றி, இந்த உடம்பும், நெஞ்சும் உருகி, மனம் கனிந்து பரம பக்தியில் ஈடுபட்டவர்களே பகவானை-சங்கோடு சக்கிரம் ஏந்தும் வரதனை காணமுடியும்-இது இல்லாமல் யார் அவரை காணமுடியும்.
திருமழிசை ஆழ்வார்-திருசந்தவிருத்தம்.

3. யம் சக்ஷுஸா மவிஷயம் ஹயமேத யஜ்வா
த்ராகீயஸா ஸுசரிதேந ததர்ச வேதா:
தம் த்வாம் கரீச கருணா பரிணாமதஸ்
பூதாநி ஹந்த நிகிலாநி நிசாமயந்தீ //


அத்தகிரி பெருமாளே! புறக்கண்களுக்கு புலனாகாத உன்னை [ப்ரம்மன் அசுவமேத யாகம் செய்து, பெரிய புண்யத்திலால் கண்டானோ அத்தகைய உன்னை உன்னுடைய கருணையிலால் ஸகல பிராணிகளும் காண்கின்றன! என்ன ஆச்சர்யம்.
ஸ்வாமி தேசிகன்- வரதராஜ பஞ்சாசத்

இந்த மூன்று மூன்று ஸ்லோகங்களையும் அநுசந்தித்தால் நம் உள்ளே வரதனை காணமுடியும் என்பது ஆழ்வார், ஸ்வாமி தேசிகனின் அசையாத நம்பிக்கை.

R.Jagannathan.

2 comments:

  1. Vanakkam Athimber.

    I have been quoting you in most of my Training Programs - I tell my colleagues, if Mr J can learn computer after 70 and type in tamil ( Which I am still not able to do) - then why should others not use computers.

    Prayers for your Peaceful life ahead - after all you are just 81 :)

    ReplyDelete
  2. உங்கள் வயது 81 என்றால் நம்ப முடியவில்லை! நமஸ்காரங்கள். "ஐந்தும் ஐந்தும் ஆய நின்னை" என்பதற்கு "பத்து அவதாரங்கள் எடுத்த உன்னை" என்று இதுவரை நினைத்திருந்தேன். விளக்கம் கொடுத்து திருத்தியதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete