Wednesday, May 18, 2011

அத்தகிரியும், அருளாளனும்- 10

அத்தகிரியும், அருளாளனும்- 10


1. நாவாயில் உண்டே; ' நமோ நாரணா ' என்று
ஓவா துரைக்கும் உடையுண்டே; மூவாத
மாக்கதிக்கண் செல்லும் வகையுண்டே; என் ஒருவர்
தீக்கதிக்கண் செல்லும் திறம் ?

பகவானை துதிப்பதற்கான நாக்கு நம் வாயிலேயே இருக்கிறது. களைப்பே இல்லாமல் ஆயிரம் தடவை ' நமோ நாராயணா ' என்று சொல்ல. அவன் திருவடியை அடைய- ப்ரப்த்தி, பக்தி என்று பல எளிய வழிகள் இருக்கின்றன. இவைகளை எல்லாம் விட்டு விட்டு சிற்றின்பம் மற்றும் பல தீய வழிகளில் விழ சிலருக்கு எப்படித்தான் ஏற்படுகின்றதோ? என்ன விந்தை இது.

முதல் திருவந்தாதி.

1. பாலாக்ருதேர் வட பலாச மிதஸ்ய யஸ்ய
ப்ரஹ்மாண்ட மண்டல மபூ துதரைக தேசே
தஸ்யைவ தத் வரத ஹந்த கதம் ப்ரபூதம்
வாராஹ மாஸ்த்திதவதோ வபு ரத்புதம் தே //

அருளாள பெருமானே! நீ சிறு குழந்தையாக ஆலிலை மேல் சயனித்து உன் வயிற்றில் சிறு பகுதியில் ப்ரமாண்டம் அனைத்தையும் அடக்கிக்கொண்டாய். இது ஒரு பெரிய அற்புதம். நீ வராஹ அவதாரம் எடுத்த போது அந்த திருமேனி ப்ரஹ்மாண்டத்தில் அடங்கி இருந்தது. இது எப்படி சாத்தியமாயிற்று? இது உன்னால் மட்டும் தான் முடியும். உன்னுடைய அற்புத திருவிளையாடல்களை என்னவென்று வர்ணிப்பது?

ஸ்வாமி தேசிகன்- வரதராஜ பஞ்சாசத்.

2. கான எண்கும் குரங்கும் முகவும்
படையா அடல் அரக்கர்
மானம் அழித்து நின்ற வென்றி
அம்மான் எனக்கு என்றும்
தேனும் பாலும் அமுதுமாய
திருமால் திருநாமம்
நானும் சொன்னேன்; நமரும் உரைமின்
நமோ நாராயணமே //

காட்டு கரடிகளையும், குரங்குகளையும் படைத்துணையாக்கி ராவணனையும், அரக்கர்களையும் வென்றான் என் திருமால். பிறரையேசொல்லிக்கொண்டிருந்த நானும் அவன் பெயரை சொன்னேன். அந்த நாமம் எனக்கு தேன் போலும், பாலும் அமுதும் போல் இருக்கிறது. ஆகையால் நம்மவர்களே வாருங்கள் அவன் நாமத்தை சொல்லுங்கள்.

பெரிய திருமொழி

2. ஸ த்வம் ஸ ஏவ ரபஸோ பவதௌபவாஹ்ய:
சக்ரம் ததேவ சித தார மஹம் ச பால்ய:
ஸாதரணே த்வயி கரீச ஸமஸ்த ஜந்தோ:
மாதங்க மாநுஷ பிதா ந விசேஷ ஹேது: //

அத்தகிரி அருளாளனே! அன்று கஜேந்திரனை காக்க கருடன் மேல் பறந்து வந்தாய். உன் கூரிய சக்ராயுதத்தால் முதலையின் வாயை பிளந்தாய். அதே பெருமாள் இன்று அருளாளனாக என் முன் நிற்கின்றாய். ஏன் இன்னும் என் சம்சார பந்தத்தில் உழலும் என்னை காக்க வரவில்லை. ஒரு வேளை அது யானை, நான் மனுஷன் என்று பார்கிறாயோ! உனக்கு அந்த பேதமே கிடையாதே. யானையை காத்த வரதனே என்னையும் காத்து அருளவேண்டும் //

ஸ்வாமி தேசிகன்- வரதராஜ பஞ்சாசத் //

3.கண்ணன் கழல் இணை
நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரயணமே//

நமக்கு நாரணன் என்ற திருநாமமே திருமந்திரம். ஓம் என்ற பிரணவமும் வேண்டாம் நம என்ற சப்தமும் வேண்டாம், நாராயணாய என்ற பெயரும் வேண்டாம் . வெறும் நாரணன் என்றாலே போதும்- சத்தியமாக சொல்லுகிறேன்- அவன் ஓடி வருவான் நம்மை ரக்ஷிப்பான் என்கிறார் ஆழ்வார். வேதத்தை காட்டிலும் மேலான பிரமாணம் கிடையாது கேசவனைக்காட்டிலும் வேறு தெய்வம் கிடையாது என்று வியாசர் கூறியதை போல ஆழ்வாரும் திண்ணமாக கூறுகிறார்.

3.இதி விஹிதமுதாரம் வேங்கடேசேந பக்த்யா
ச்ருதி ஸுபகமிதம் ய: ஸ்தோத்ர மங்கீகரோதி
கரிசிகரி விடங்க ஸ்த்தாயிந: கல்ப வ்ருக்ஷாத்
பவதி பலமசேஷம் தஸ்ய ஹஸ்தாபசேயம் //

இவ்வாறு வேங்கடேசனால் பக்தியோடு இயற்றப்பட்டதாய் கருத்துக்கள் நிறைந்ததாய் செவிக்கும் இனியதான இந்த ஸ்தோத்திரத்தை எவன் ஏற்று பயிகின்றானோ அவனுக்கு அத்தகிரியான மாளிகையில் புறாக்கூண்டு போல மேல்பாகத்தில் நிற்கின்ற கற்பக மரத்திலிருந்து எல்லா பலனும் கையால் பறிக்க ஏற்றதாய் ஆகின்றது.

ஸ்வாமி தேசிகன்- வரதராஜ பஞ்சாசத்.

அடியேனுக்கு வெகு நாளாக ஒரு ஆசை. நம் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் பகவானை எப்படி அநுபவித்துள்ளார்கள் என்று நானும் அநுபவித்து அன்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக வேகா சேது என்ற அடியேனுடைய பிளாக்கில்- ஓ! ரங்கசாயி என்ற பிரிவில் எழுதி வந்து இன்று காஞ்சி வரதனின் கருட சேவையோடு நிறைவு பெறுகிறது.

அரங்கன்- வேங்கடவன்- அருளாளன் ; அரங்கம்- வேங்கடமலை - அத்தகிரி - வைணவர்களின் ஸ்வர்க்கம்- அமுதமான தித்திக்கும் நாதமாம் நாரணனின் நாமம். இவைகளை 10-10 பாசுரங்களாக அர்த்தத்தோடு விளக்கி வந்தோம் -ஆழ்வார்களின், ஆச்சார்யர்களின் பாசுரம் மூலமாக.

அதே மாதிரி அரங்கன் - திருவிழா, வேங்கடவன் ப்ரஹ்மோத்ஸவம், அருளாளனின் ப்ரஹ்மோத்ஸவம் இவைகளை பவர் பாயிண்ட் ஸ்லைட் ஷேர் மூலமாக அன்பர்களுக்கு அளித்துள்ளோம்- நூற்றுக்கணக்கான அன்பர்கள் இவைகளை கண்டு களித்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார்கள். அவர்களுக்கெல்லாம் என் மனமார்ந்த வணக்கமும் மரியாதையும்.

எங்கெல்லாம் அலைந்து சம்சாரகடலில் சுற்றிக்கொண்டிருந்த அடியேனை அரங்கன் 1994 ல் திருவரங்கத்திற்கு அழைத்தான். தினமும் அவனை காண வசதி செய்து கொடுத்தான்.அவன் கிருபையால் ஆன்மீகத்தில் ஈடுபடுத்தி பல கட்டுரைகளை எழுதவைத்தான்.பிளாக் மூலமாக பல அரிய ஸ்தோத்திரங்களை போடவைத்தான்.

அவனின் அருளை வார்த்தைகளால் சொல்லவோ, எழுதவோ முடியாது.இதை படிக்கும் அன்பர்களுக்கு அரங்கன்- வேங்கடவன்- அருளாளன் அருள் பரிபூர்ணமாக கிடைக்க அடியேன்
ப்ரார்த்திக்கிறேன்.

தாஸன் ஜெகன்னாதன்.

அத்தகிரியும், அருளாளனும்- 9

அத்தகிரியும், அருளாளனும்- 9

1. பெற்றார் பெற்று ஒழிந்தார்; பின்னும் நின்று அடியேனுக்கு
உற்றானாய், வளர்ந்து என் உயிராகி நின்றானை
முற்றா மாமதி கோல் விடுத்தானை, எம்மானை
எத்தால் யான் மறக்கேன்? இது சொல் என் ஏழைநெஞ்சே //

பெற்ற தாய் தந்தையர் என்னை விட்டு போய்விட்டார்கள். இந்நிலையில் அடியவனுக்கு நீ தாயாக, தந்தையாக நின்று உய்வித்தாய். அதோடு நில்லாமல் எனக்கு உயிராகவும் நிற்கின்றாய். எல்லோர் நோயையும் போக்குபவன். அப்படிப்பட்ட எம்பெருமானை நான் எப்படி மறக்க முடியும். மூட நெஞ்சமே இதை சொல்லுவாயாக.

பெரிய திருமொழி.

1. வாழி அருளாளர் வாழி அணி அத்தகிரி
வாழி எதிராசன் வாசகத்தோர் வாழி
சரணாகதியென்னும் சார்வுடன் மற்றொன்றை
அரணாகக் கொள்ளாதார் அன்பு //

பேரருளாளர் வாழ்க, அலங்காரமான அத்தகிரி வாழ்க, பாஷ்யகாரர் ஸ்ரீ ஸூக்திகளில் ஈடுபட்டவர் வாழ்க, ப்ரப்த்தி என்னும் உபாயத்துடன் வேறு ஒன்றையும் உபாயமாக கொள்ளாதார் அன்பு வாழ்க.

ஹஸ்தகிரி மஹாத்மியம்.

2. காசும் கரையுடைக் கூறைக்கும் அங்கு ஓர் கற்றைக்கும்
ஆசையினால், அங்கு அவத்தப் பேரிடும் ஆதர்காள்
கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்து இருமினோ
நாயகன் நாரணந்தம் அன்னை நரகம் புகாள் //

நாலிரண்டு காசுக்கும், கட்டு நெற்கதிருக்கும், கறையுடைய ஆடைக்கும் ஆசைப்பட்டு கீழ் தேவதைகளின் பெயரிட்டு வீணே கழிக்கிறீர்கள். அடியார்களின் துன்பத்தைப்போக்கும் மேலான தெய்வமாம் எங்கள் நாரணன். அவன் பெயரிட்டு மேலான செல்வமாம் வைகுண்டத்துக்கு செல்ல வழி வகுத்துக்கொள்ளுங்கள். அவன் நாமம் இட்ட பிள்ளையின் தாய் ஒரு போதும் நரகத்திற்கு போகமாட்டாள்.

பெரியாழ்வார் திருமொழி

2. வம்மின் புலவீர் அருளாளபெருமாள் என்றும்
அருளாழி அம்மான் என்றும்
திருமாமகளைப் பெற்றும் என் நெஞ்சம் கோயில்
கொண்ட பேரருளாளர் என்றும்
வியப்பா விருதூதும்படி கரைபுரண்ட கருணைக் கடலே
எவ்வண்ணம் பேசுவீர் ஈதென்ன பாங்கே //

புலவர்களே வாருங்கள்! அரூளாள பெருமான், அருளாழி அம்மான், பிராட்டியை தேவியாக கொண்டு சதா தன் மார்பில் தரித்துக்கோண்டிருப்பவனும், கருணைக்கடல், வள்ளல் சதா என் மனதில் குடிகொண்டு நித்ய வாசம் செய்யும் பேரருளாளர் என் அத்தகிரி பெருமானை பற்றி பேச யாருக்கும் நேர்மை கிடையாது- அதாவது அவன் கருணை எல்லையை கடந்தது.

ஹஸ்தகிரி மஹாத்மியம். //

3. ஈனமாய எட்டும் நீக்கி ஏதம் இன்றி மீதுபோய்
வானம் ஆளவல்லையேல் வணங்கி வாழ்த்து, என் நெஞ்சமே!
ஞானம் ஆகி, ஞாயிறு ஆகி ஞாலமுற்றும் ஓர் எயிற்று
ஏனமாய் இடந்த மூர்த்தி எந்தைபாதம் எண்ணியே //

என் நெஞ்சமே! ஆத்மாவுக்கு கெடுதல் கொடுக்கும் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யாம், அஞ்ஞானம், அசூயை ஆகிய எட்டையும் போக்கி , சம்சார துக்கமெல்லாம் நீங்கி பரம பதம் அடைய பகவானின் திருவடியை பற்று. அவனே ஆத்ம சுகத்தை அளிப்பவன்.சூரியனை போல அறிவு சுடரை ஏற்றுபவன்.

திருச்சந்தவிருத்தம்.

3. வரத தவ விலோகயந்தி தந்யா:
மரகத பூதர மாத்ருகாயமாணம்
வ்யபகத பரிகர்ம வாரவாணம்
ம்ருகமத: பங்க விசேஷ நீலமங்கம் //

வரம் தரும் வரதனே! திருவாபரணங்கள், கவசம் இவற்றை கழற்றிய நிலையிலும், மரகத மலைக்கு ஒப்பாக மூலவடிவம் போன்றதாய் கஸ்தூரி குழம்பினால் மிக நீல நுஇறம் உள்ளதான உனது திருமேனியை காண்பவர்கள் பெரும் பாக்கிய சாலிகள்.

ஸ்வாமி தேசிகன்- ஸ்ரீ வரதராஜ பஞ்சாசத்.

R.Jagannathan

அத்தகிரியும், அருளாளனும்-8

அத்தகிரியும், அருளாளனும்-8

1. நாவாயில் உண்டே ' நமோ நாராயணா ' என்று
ஓவாதுரைக்கும் உரையுண்டே- மூவாற
மாக்கதிக்கண் செல்லும் வகையுண்டே- என்னொருவர்
தீக்கதிக்கண் செல்லும் நிறம்?

எம்பெருமானை துதிக்க நம் வாய் இருக்க வேறு எங்கும் தேடி போகவேண்டாம். களைப்பிள்ளாமல் திரும்ப் திரும்ப சொல்ல - ' நமோ நாராயணா ' என்ற நாமம் இருக்கே! அந்த திருமந்திரம் நம்மை திருமப் பிறவாமல் வைகுண்டத்திற்கு இட்டு செல்லும். மற்றும் பக்தி, ப்ரப்த்தி போன்ற வழிகள் இருக்கு-இவை எல்லாம் இருக்க இந்த பாழும் உடல் தீய வழிகளிளேயே சென்று விழுகிறதே - இது என்ன விந்தை?
முதல் திருவந்தாதி.

1. திருவுரையாய்த் தாம் பொருளாய் நிற்பார் வந்தார்
திருவருளால் செழுங்கலைகள் தந்தார் வந்தார்
மருவிலர்க்கு மயக்குரைக்கும் மாயோன் வந்தார்
வானேற வழி தந்தார் வந்தார் தாமே //
திருமந்திரத்திற்கு பொருளாய்- அதாவது பேரழகை பொழிகின்றவராய், ஆனந்தத்திற்கு வசப்பட்டு நிற்பவர் வந்தார், நமக்கு உயர்ந்த சாஸ்திரங்களை தந்தவர் வந்தார், நாஸ்திகர்களுக்கு மேலும் மேலும் மோஹன சாஸ்திரங்களை வெளியிடுகின்ற வஞ்சகர் வந்தார்.பரம பதத்திற்கு ஃஷெல்ல உபாயத்தை உபதேசித்தவர் வந்தார்.

ஹஸ்தகிரி மஹாத்மியம்.

2. கைய வலம்புரியும் நேமியும்; கார்வண்ணத்து
ஐயர் மலர்மகள் நின் ஆகத்தாள்- செய்ய
மறையாள் உன் உந்தியான்; மாமதிள் மூன்று எய்த
இறையான், நின் ஆகத்து இறை //

மேகம் போல் நிறமும், வலம்புரி சங்கும், சக்கரமும் ஏந்தி நிற்கும் பெருமானே! மலர் மகள் நின் மார்பில் தவழ்கிறாள். இவையாவும் உன் அழகை காட்டுபவை.
வேதங்கள் படைத்த நான்முகன் உன் நாபியில் பிறந்தான். திரிபுரங்களையும் எறித்த சிவனோ ஒரு மூலையில் இருக்கிறான். இவர்கள் இருவருக்கும், பிராட்டிக்கும் உன்னிடம் இடம் கொடுத்த உன் சீலகுணத்தை என்னவென்று புகழ்வது.

பொய்கை ஆழ்வார்- முதல் திருவந்தாதி

2. திண்மணிகள் பொன்னுடனே சேர்தலாலும்
சிதையாத நூல்வழியிற் சேர்த்தியாலும்
வண்மை எழும் ஈரிரண்டுவண்ணத்தாலும்
வானவருக்கும் வியப்பான வகுப்பினாலும்
உண்மையுடைய வாசியொளி ஓசையாலும்
ஒரு காலும் அழியாத அழகினாலும்
மண்மகளார்க்கு அலங்கார ம் என்ன மன்னும்
மதிட்கச்சி நகர் கண்டு மகிழ்ந்திட்டானே //

காஞ்சி நகர் திடமான ரத்தினங்களாலும், தங்கத்தாலும் சேர்த்து இழைக்கப்பட்டது. அழியாத சிற்ப சாஸ்திரத்தால் அழகு பெற்றது.நாங்கு ஜாதியனரும் சேர்ந்து நிறைந்து தேவர்களும் வியக்கத்தக்க அழகுடன், குதிரைகள் மற்றும் யானைகள் சூழ பூமிக்கு ஆபரணம் போன்ற மதிள்களுடன் தேவலோகம் போல் காட்சிதரும்- காஞ்சியை கண்டு ப்ரஹ்மா மகிழ்ந்தார்

ஹஸ்தகிரி மஹாத்மியம்

3. மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து, இருளோடு முட்டி
ஆணிப்பொன் அன்ன சுடர்படுமாலை; உலகு அளந்த
மாணிக்கமே! என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா
ஆணிப்பொன்னே1 அடியேன் அடி ஆவி அடைக்கலமே //

உலகையெல்லாம் அளந்த என் மாணிக்கமே, மரகதவண்ணனே! உவமையில்லா மாற்றுயர்ந்த பொன்போலும் மதிப்புடையவனே! சூரியனிருளில்-குரங்கு கையில் அகப்பட்ட மாணிக்கம் போல-இந்த மாலை பொழுதில் உனக்கு அடியவளான நான் உன்னை பிறிந்து வாடுகிறேன். என் உயிர் உனக்கு அடைக்கலமாகிவிட்டது.

திருவிருத்தம்.

3. திருவுரையாய்த் தாம் பொருளாய் நிற்பார் வந்தார்
திருவருளால் செழுங்கலைகள் தந்தார் வந்தார்
மருவிலர்க்கு மயக்குரைக்கும் மாயோன் வந்தார்
வானேறவழி தந்தார் வந்தார் தாமே //

தன்னுடைய சிறந்த க்ருபையால் உயர்ந்த சாஸ்த்திரங்களை உலகம் உய்ய தந்தவர் வந்தார்.நாஸ்திகர்களுக்கு அவர்கள் மயங்கி விழ மோஹன சாஸ்த்திரங்களை தந்து தள்ளியவர் வந்தார். அடியவர்களுக்கு பரமபதத்திற்கு செல்ல உபாயத்தை உபதேசித்தவர் வந்தார்.

ஹஸ்தகிரி மஹாத்மியம் ..

R.Jagannathan.

அத்தகிரியும், அருளாளனும்-7

அத்தகிரியும், அருளாளனும்-7

1. நாவாயில் உண்டே; 'நமோ நாராயணா ' என்று
ஓவா துரைக்கும் உரையுண்டே; - மூவாத
மாக்கதிக்கண் செல்லும் வகையுண்டே; என் ஒருவர்
தீக்கதிக்கண் செல்லும் திறம்?

எம்பெருமானை துதிப்பதற்கு நாக்கு எங்கும் தேடாமல் நம் வாயிலேயே இருக்கிறது. திருப்பி திருப்பி களைப்பில்லாமல் சொல்ல நமோ நாராயணா என்ற திருமந்திரம் நம்மை பரம பதத்திற்கு இட்டு செல்ல பக்தி, ப்ரபத்தி போன்ற எளிய வழிகள் இருக்கின்றன. இவையெல்லாம் விட்டு விட்டு சிலருக்கு தீய வழிகளில் செல்ல எப்படி நாட்டம் ஏற்படுகிறதோ ? என்ன விந்தை இது.

முதல் திருவந்தாதி.

1. பெருமையுடை அத்தகிரி பெருமாள் வந்தார்
பேராது அருள்பொழியும் பெருமாள் வந்தார்
அருமறையின் உச்சிதனில் நின்றார் வந்தார்
அங்கமுடன் அவையாகும் பெரியோர் வந்தார்

பெருமையுடைய அத்தகிரி பெருமாள் எழுந்தருளினார். நீங்காத கருணயுடைய பெருமாள் வந்தார். வேதத்தின் சிகரத்தில் போற்றப்பட்டு நின்றார். சங்கு, சக்கர கதாபாணியாய் வேதஸ்வரூபியான பெருமாள் வந்தார். பிராட்டி ஸப்தஸ்வரூபமாய் நிற்க தாம் அர்த்த ஸ்வரூபியாக நிற்பார்.

ஹஸ்தகிரி மஹாத்மியம்.

2. கண்டு கொண்டு என் கண்- இணை ஆரக்களித்து
பண்டைவினையாய்டின பற்றோடு அறுத்து
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல்-மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே //

வைகுண்டத்தில் காணும் பெருமாளை வரதனாய் காண பாக்கியம் பெற்றேன் அவரை பார்த்து மகிழும் பேறு பெற்றேன். அதனால் என் வினைகள்-முந்தியன-நல்லவை, தீயவை அனைத்தையும் போக்கிக்கொண்டேன். இனி அவனை அடைய தடுப்பவர் யாரும் இல்லை. இது என்னோடு இல்லாமல் திருமால் அடியவர்களுக்கு உபகாரம் செய்ய தித்திக்கும் அமுதமாக திருவாய் மொழியை என் பெருமாள் என் மூலமாக பாட செய்தான். என்னே என் பேறு.


2.. திருவுரையாய்த் தாம் பொருளாய் நிற்பார் வந்தார்
திருவருளால் செழுங்கலைகள் தந்தார் வந்தார்
மருவிலர்க்கு மயக்குரைக்கும் மாயோன் வந்தார்
வானேற வழி தந்தார் வந்தார் தாமே //

திருமந்திரத்திற்கு பொருளாய்- அதாவது பேரழகை பொழிகின்றவராய், ஆனந்தத்திற்கு வசப்பட்டு நிற்பவர் வந்தார், நமக்கு உயர்ந்த சாஸ்திரங்களை தந்தவர் வந்தார், நாஸ்திகர்களுக்கு மேலும் மேலும் மோஹன சாஸ்திரங்களை வெளியிடுகின்ற வஞ்சகர் வந்தார்.பரம பதத்திற்கு ஃஷெல்ல உபாயத்தை உபதேசித்தவர் வந்தார்.

3. கரிய மேனி வெளியநீறு இடும்
பெரிய கோலத் தடங்கண்ணன், விண்னோர் பெருமான் தன்னை
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏந்தி உள்ளப் பெற்றேற்கு
அரியது உண்டோ- எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே ?

அருளாளன் செம்பொன் நிறத்தவன்- கரிய திருமேனி. அந்த திருமேனியில் கருவிழியின் அழகுக்கு மேலே அஞ்சனப்பொட்டு. அழகிய விசாலமான கண்கள். நித்யசூரிகளுக்கு தலைவன். அந்த தலைவனை இசைமாலையாம் திருவாய் மொழி என்ற மாலைகளால் துதிக்கப்பெற்றேன். இதைவிட பாக்கிய சாலி யார் இருப்பார். உனக்கு அடிமை செய்தே இனி காலமெல்லாம் கழிப்பேன்.

திருவாய்மொழி.

3. அத்தகிரி அருளாள பெருமாள் வந்தார்
ஆனை, பரி தேரின் மேல் அழகர் வந்தார்
கச்சிதனில் கண்கொடுக்கும் பெருமாள் வந்தார்
கருதவரம் தரும் தெய்வ பெருமாள் வந்தார்
முத்தி மழை பொழியும் முகில் வண்ணர் பெருமாள் வந்தார்
மூலமென ஓலமிட வல்லார் வந்தார்
உத்திர வேதிக்குள்ளே உதித்தார் வந்தார்
உம்பர் தொழும் கழலுடையார் வந்தார் தாமே.

ஹஸ்தகிரியில் எழுந்தருளியிருக்கும் பேரருளாள பெருமாள் , யானை, குதிரை, தேர் ஆகிய வாஹனங்களில் கண்ணை மயக்கும் வண்ணம் வந்தார்.மனதால் நினைத்த மாத்திரமே வேண்டிய வரத்தை அருளும் பெருமாள் வந்தார். தேவர்களுக்கும் பக்தர்களுக்கும் மோக்ஷத்தையளிக்கும் பெருமாள் வந்தார். யானைக்கு அருளிய பெருமாள் வந்தார்.உத்திர வேதிக்குள்ளே ஆவிர்பவிப்பவர் , நித்ய சூரிகளால் தொழப்படுபவர், பக்தர்களுக்கு திருவடியை காண்பித்து அடைக்கலம் அருளும் பெருமாள் வந்தார்.

ஹஸ்தகிரி மஹாத்மியம்.

R.Jagannathan.