திருவரங்க அரங்கனின் சிறப்பு
The Glory of SRIRANGAM
சென்ற பிளாக்கில் ஸ்ரீரங்கத்தின் சிறப்பை பற்றிய ஒரு அரிய பாடலை தந்தோம். அரங்கனின் சிறப்போ கணக்கில் அடங்கா! ஆழ்வார்கள் அழகனின் அழகை எப்படி எல்லாமோ அநுபவித்திருக்கிறார்கள்.
அவைகளில் சிலவற்றை அர்த்தத்தோடு கீழே காணலாம்.
தன் அடியார் திறத்தகத்துத் தாமறையாள்
ஆகிலும் சிதகு உரைக்குமேல்
என் அடியார் அதுசெய்யார், செய்தாரேல்
நன்று செய்தார் என்பர்போலும்
மன் உடைய விபீணற்கா மதில் இலங்கைத்
திசைநோக்கி மலர்கண் வைத்த
என்னுடைய திருவரங்கற்கு அன்றியும்
மற்றுஒருவருக்கு ஆள் ஆவரே?
பெரியாழ்வார் திருமொழி- 4-9-2
எவ்வளவு குற்றங்கள் அடியார் செய்திருந்தாலும் அவைகளை குணமாக கொள்பவன் அரங்கன்.
அவ்வளவு வாத்ஸல்யம் அரங்கனுக்கு அடியார்களிடம்.
தன் அடியார்களை குறித்து பெரிய பிராட்டியே குற்றம் சொல்ல தொடங்கினாலும் -என் அடியார்கள் அத்தகைய குற்றங்களை செய்யமாட்டார்கள்-அப்படியே செய்திருந்தாலும் அவர்கள் நன்மையே செய்தவர்கள் ஆவர்-என்று சொல்பவன் பெரிய பெருமாள். செல்வம் பொருந்திய விபீடணனுக்காக மதிளையுடைய இலங்க்கையை நோக்கிதன் மலர்கண்களை வைத்து அருளியவன். என்னுடைய தலைவனான இந்த பெரிய பெருமாளைத் தவிர வேறொருவருக்கு ஆட்படுவார் எவரேனும் உண்டோ?
அடியாரின் பெருமையும் அரங்கனின் பெருமையும் ஒருங்கே பேசும் ஒரு அருமையான பாசுரம்.
இனி அவர் மகள் அரங்கனை எப்படி அநுபவிக்கிறார் என்று பார்க்கலாம்.
தாம் உகக்கும் தம் கையில் சங்கமே போலாவோ
யாம் உகக்கும் எம்கையில் சங்கமும்? எந்திழையீர்
தீமுகத்து நாகணைமேல் சேரும் திருவரங்கர்
ஆ! முகத்தை நோக்காரால் அம்மனே ! அம்மனே!
நாச்சியார் திருமொழி- //
கண்ணனை கானாமல் ஆண்டாள் உடல் மெளிந்தாள். கைவளைகள் நழுவின. அந்த விரக நிலையில் தன்னை சூழ்ந்திருக்கும் பெண்டிரை நோக்கி ஆண்டாள் கத்றும் பாசுரம் இது.
ஆபரணங்களை அணிந்துள்ள பெண்களே! நீங்களே சொல்லுங்கள் - என்ன நியாயம் இது? தன் கையில் உள்ள சங்கம் எப்போதும் நழுவாது இருக்கவேண்டுமென்று அவர் நினைக்கிறாரோ? அது போல் என் கை வளையல்கள், சங்கமும் நழுவாது இருக்கவேண்டும் என்று அவர் பார்த்துக்கொள்ளவேண்டாமோ? கொடிய நாகணை மேல் பள்ளிகொள்ளும் திருவரங்கர் கண்ணால் நோக்குவதையும் கைவிட வேண்டுமோ? ஐயோ! ஐயோ! முன்பு இனியவராக இருந்தவர்- புலி, பாம்பு போல- நினைத்தாலும் பயத்தை விளைக்கும்படி ஆனது எப்போ?
No comments:
Post a Comment