Saturday, October 2, 2010

அரங்கனின் பெருமை-அரங்கத்தின் பெருமை-2

அரங்கனின் பெருமை-அரங்கத்தின் பெருமை-2



மச்சணி மாட மதிள் அரங்கர் வாமனனார்
பச்சைப் பசுந்தேவர் தாம்பண்டு நீரேற்ற
பிச்சைக் குறயாகி, என்னுடைய பெய்வளைமேல்
இச்சை உடையரேல், இத்தெருவே போதாரே?
                                                நாச்சியார் திருமொழி-4


பச்சை பசுந்தேவர்-இந்த மாய கண்ணன் தான் முன்பு மகாபலியின் யாகசாலைக்கு நடந்து சென்று பிச்சையேற்று மூவடி நிலத்தை அளந்து கொண்டார். ஒரு வேளை அப்பிச்சையில் குறை இருக்குமோ? அதனால் தான் என் வளைமேல் இச்சை கொண்டாரோ?

அப்படி இருந்தால் அவர் யாக சாலைக்கு நடந்ததுபோல் இத்தெருவில்    என் வீட்டு வாசலில் நடந்து காட்டி என்னை மகிழ்விக்கலாமே! அசுரனுக்கு காட்டிய கருணையை எனக்கு காட்டலாகாதோ! அப்படி செய்தால் அரங்கனின் அழகை நான் கண்டு ஆனந்திருப்பேனே!

இருள் இரியச் இமைக்கும் நெற்றி
  இனத்துத்தி அணிபணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவரசப் பெருஞ்சோதி அனந்தன் என்னும்
  அணிவிளங்கும் உயர்வெள்ளை அணையை மேவித்
திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி
  திரைக்கையால் அடிவருடப் பள்ளி கொள்ளும்
கருமணியைக்கோமளத்தைக் கண்டு கொண்டு என்
  கண்ணிணைகள் என்றுகொலோகளிக்கும் நாளே?
                                            குலசேகராழ்வார்-பெருமாள் திருமொழி //


திருவரங்கத்தில் ஆதிசேடன் மீது யோக நித்திரை செய்யும் என் திருமால்-அழகிய வெண்மையான படுக்கையாக  அமைந்த  அவ்வனந்தன்- இருள் சிதறி ஓடும்படி ஒளிவிடுகின்ற மாணிக்கங்கள் விளங்கும் நெற்றியுடையவன்-சிறந்த புள்ளிகளுடன் ஆயிரம் படங்களை கொண்டவன். பாம்புகளுக்கெல்லாம் அரசன். அந்த ஆதிசேஷன் படுக்கையாக--காவிரியானவள் தன் திருக்கையால் அடிவருட கண்வளர்தருளுகிறான் திருவரங்கன். அந்த பெரிய பெருமாளை, கரிய மாணிக்கத்தை, கோமளத்தை கண்ணார கண்டு எனது இரு கண்களும் மகிழ்ச்சி கொள்ளும் நாள் எந்த நாளோ?

குலசேகராழ்வார் பல காலம் அரங்கனை காண ஏங்கி கொண்டிருந்தார். அவரின் அரச கடமைகளாலேயோ அல்லது வேறு ஏதோ காரணத்தால் அவரால் திருவரங்க பயணத்தை தொடங்க முடியவில்லை. அந்த விரக தாபத்தால் வெளிவந்த திருமொழிகள் அரங்கனின் அழகுக்கு அழகு சேர்க்கின்றது.

மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளு இவ்
  வையம் தன்னொடும் கூடுவது இல்லையான்
ஐயனே! அரங்கா! என்று அழைக்கின்றேன்
  மையல்கொண் டொழிந்தேன் எந்தன் மாலுக்கே.
                              பெரிய திருமொழி


நிலையற்ற இவ்வுலக வாழ்க்கையை நிலையானது என்று கருதுகிற இவ்வுலகத்தாரோடு நான் சேருவதில்லை. ஐயனே! அரங்கனே! என்று கூவுகிறேன், பிதற்றுகிறேன். அரங்கன் மீது தீரா பக்திகொண்டு பித்தனானேன்

பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமல செங்கண்
  அச்சுதா! அமரர் ஏறே! ஆயர்தம் கொழுந்தே! என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர-லோகம் ஆளும்
  அச்சுவை பெறினும் வேண்டேன், அரங்கமா நகருளானே!
                                            தொண்டரடி பொடி ஆழ்வார்- திருமாலை


பச்சை நிறமுள்ள பெரிய திருமலை போன்ற திருமேனியையும், பவளம் போன்ற வாயையும், தாமரை போன்ற திருகண்கள் உடையவனாய்-அச்சுதா! அடியவரை ஒருநாளும் கைவிடாதவனே! ஆயர்குலத்தின் கொழுந்தே என்று உன் திருநாமங்களை அனுபவிக்கும் சுவையை காட்டிலும் பரமபதத்தை ஆளுவதினால் கிட்டும் இன்பம் பெற்றாலும் அந்த சுவை எனக்கு வேண்டாம்-அரங்கன் இருக்கும் இடமே எனக்கு வைகுண்டம்.

1 comment:

  1. மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளு இவ்
    வையம் தன்னொடும் கூடுவது இல்லையான்
    ஐயனே! அரங்கா! என்று அழைக்கின்றேன்
    மையல்கொண் டொழிந்தேன் எந்தன் மாலுக்கே.
    பெரிய திருமொழி
    this is not periya tirumozhi
    this paasuram kulasekara aazhvar
    pl. check it:)

    ReplyDelete