Monday, November 29, 2010

வேங்கடமும் வேங்கடநாதனும்-3

வேங்கடமும் வேங்கடநாதனும்-3

1. உளன் கண்டாய் நன்னெஞ்சே! உத்தமன்; என்றும்
     உளன் கண்டாய்; உள்ளுவார் உள்ளத்து-உளன் கண்டாய்;
    வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
    உள்ளத்தின் உள்ளான் என்று ஓர்.


நம்மை காப்பதற்காக அவன் எத்துணை பெறு முயற்சி எடுத்துக்கொள்கிறான்-அதற்காக நீரிலும், மலையிலும் நின்று தவம் செய்கிறான். நம் உள்ளத்தில் உறைவதற்காக அவன் திருப்பாற்கடலிலும், திருவேங்கடத்திலும் உளன். இவ்வாறு பல திவ்ய தேசங்களில் நின்றும், இருந்தும், கிடந்தும் அவன் நமக்காக படாத பாடு படுகிறான்.

அத்தகைய பெருமான் இன்று வந்து நம் நெஞ்சம் நிறைய புகுந்தான். ஆதலால் அவனை என்றும் நினைப்பாயாக.

                                                                                       முதல் திருவந்தாதி- 99.

1. பல விதரண தக்ஷம் பக்ஷபாதநபிஞ்ஜ்ஞம்
    ப்ரகுண மநுவிதேயம் ப்ராப்ய பத்மா ஸஹாயம்
   மஹதி குண ஸமாஜே மாந பூர்வம் தயே த்வம்
   ப்ரதிவதஸி யதார்ஹம் பாப்மநாம் மாமகாநம் //


ஸ்ரீனிவாசனுடைய தயாகுணம்- தயாதேவியே! பலன் அளிப்பதில் வல்லவனாய் பக்ஷபாதமே இல்லாதவனாய் நேர்மையுடையவனாய் அணுகுவதற்கு எளியனாய், அஷ்டாக்ஷர மந்திரத்திற்கு வசப்பட்டவனாய் பெரிய பிராட்டியை துணைகொண்டவனான ஸ்ரீனிவாச பெருமாளை அடைந்து- அவனிடம் நீ எனக்காக- என்னுடைய பாபங்களை மன்னிக்குமாறு வாதாடுகின்றாய்-என்னே உன் தயை.
                                                                                   ஸ்வாமி தேசிகன்- தயா சதகம்

2. கைய வலம்புரியும் நேமியும்; கார்வண்ணத்து
    ஐய! மலர்மகள் நின் ஆகத்தாள்-செய்ய
    மறையாள் உன் உந்தியான்; மாமதிள் மூன்றுஎய்த
   இறையான், நின் ஆகத்து இறை.


   திருவேங்கடமுடையானே! மேகம் போல் நிறமும், இயல்பும் வாய்ந்தவனே! வலும்புரி சங்கும், சக்கிரமும் உன் கைகளில் விளங்குகின்றன. மலர் மகளோ நின் மார்பில் இருக்கிறாள். இவை யாவும் உன் ஐஸ்வர்யத்தையும் அழகையும் காட்டுகின்றன. உம்மை அறிவிக்கும் வேதத்தை ஓதும் பிரும்மனோ உன் கொப்புழில் பிறந்தான். சிவனோ உன் திருமேனியில் ஒரு மூலையில் கிடக்கிறான். பிரும்ம ருத்திரர்கள், பெரிய பிராட்டி- எல்லோருக்கும் உன் திருமேனியில் இடம் கொடுத்தாயே உன் சீலத்தை என்ன என்று சொல்வது!

                                                                        பொய்கை ஆழ்வார்-முதல் திருவந்தாதி.

2. பரிமித பலஸங்காத் ப்ராணிந:கிம்பசாநா:
    நிகம விபணி மத்யே நித்ய முக்தாநுஷக்தம்
    ப்ரஸதந மநுகம்பே ப்ராப்தவத்யா பவத்யா
    வ்ருஷகிரி ஹரிநீலம் வ்யஞ்ஜிதம் நிர்விசந்தி//

   சாதாரண மனிதர்கள் அற்ப பலன்களை கருதி வேதங்களாகிய -உன்னால் காட்டப்பட்ட எப்பொழுதும் முத்து கலந்த-( நித்ய சூரிகளும், முக்தர்களாலும் சூழப்பட்ட ) திருமலையில் உள்ள பகவானாகிற நீல திருமேனியை அநுபவிக்கின்றனர்.( வேதம் கடைத்தெரு போன்றது. அங்கு விலை உயர்ந்த பொருளும், மலிவான பொருளும் விற்கப்படுகின்றன. பல மனிதர்கள் மலிவான பொருளை வாங்கி செல்கின்றனர். உயர்ந்த பொருளான-மோட்ச மார்க்கத்தை நாடுவதில்லை. அவர்கள் மீது-தயா தேவியே! நீ இரக்கம் கொள்கிறாய். உன் துணையினால் தான் அவர்கள் திருவேங்கடமுடையானது நீல திருமேனியை அநுபவிக்கமுடிகின்றது )
                                                                       ஸ்வாமி தேசிகன்- தயா சதகம்

3. உளன் கண்டாய் நன்னேஞ்சே! உத்தமன்; என்னும்
    உளன் கண்டாய்; உள்ளுவார் உள்ளத்து- உளன் கண்டாய்
    வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
    உள்ளத்தில் உள்ளான் என்று ஓர்.

    பிறரை காத்தால் அன்றி உயிர் தரிக்க மாட்டாத உத்தமன் அவன். தம்மை நினைப்பவர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து நித்ய வாசம் கெய்கிறான் அவன். நம்மை கடைத்தேற அவன் எத்துனை பெரு முயற்சி எடுதுக்கொள்கிறான்-திருபாற்கடலிலும், திருவேங்கடத்த்கிலும் இன்னும் பல திவ்யதேசங்களில் நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் படாத பாடு படுகின்றான். அத்தகைய பெருமான் இன்று என் நெஞ்சில் நிறைய புகுந்தான். அவனை நீ சதா நினை நெஞ்சே!

                                                                        பொய்கை ஆழ்வார்- முதல் திருவந்தாதி.

3. ஸாரம் லப்த்வா கமபி மஹத: ஸ்ரீநிவாஸாம்புராசே:
    காலே காலே கநரஸவதீ காளிகேவாநுகம்பே
    வ்யக்தோந்மேஷா ம்ருகபதி கிரௌ விச்வ மாப்யாயபந்தீ
    சீலோபஜ்ஞம்  க்ஷரதி பவதீ சீதளம் ஸத்குணௌகம் //


தயா தேவியே! பெரிய ஸ்ரீனினாசன் என்ற கடலினின்று அற்புதமான ஸாரமான அம்சத்தை பெற்று திருவேங்கட மலையில் வாழும் வெளிப்பட்ட தோற்றமுடையவள். மேக கூட்டங்கள் போல் உலகத்தை மழை பொய்து குளிர செய்வதுபோல் - பக்தர்களை குளிர செய்கிறாய்-உன் தயையாலே!.

                                                                                        ஸ்வாமி தேசிகன்- தயா சதகம்.

சேதநர்கள்:

பக்தர்களின் கூட்டம் வெள்ளம் போல் எப்போதும் திருமலையில் அலை மோதும். எல்லோருடைய மனதிலும், வாக்கிலும் ஒன்றே ஒன்று தான்- ஸ்ரீநிவாசா! கோனிந்தா! அவனை ஒருதரம் தரிசித்துவிட்டால் போதும்-மனதிலுள்ள பாரம் எல்லாம் இறக்கிவைத்த நிம்மதி. இனி அவன் பார்த்துக்கொள்வான் என்ற திட விச்வாஸம். இந்த நம்பிக்கை தான் வாழ்க்கையின் ஆதாரம்.

R.Jagannathan.

Thursday, November 25, 2010

வேங்கடமும், வேங்கடேசனும்-2

வேங்கடமும், வேங்கடேசனும்-2



1. பேசும் இன் திருநாமம் எட்டெழுத்தும்
    சொல்லி நின்று பின்னரும்
    பேசுவார் தமை உய்ய வாங்கிப்
    பிறப்பறுக்கும் பிரான்- இடம்
    வாச மாமலர் நாறுவார்பொழில்
    சூழ்தரும் உலகுக்கு எலாம்
    தேசமாய் திகழும் மலைத்திரு
    வேங்கடம் அடை நெஞ்சமே!


என் நெஞ்சமே! நாம் எல்லோரும் சொல்லும் நாமம் இனிய நாமம்-நமோ நாராயணா! என்னும் திருவெட்டெழுத்து மந்திரம். அதை ஒரு தடவை சொன்னாலே போதும்-நம்முடைய கவலைகள், இடர்கள் எல்லாம் பறந்து போய்விடும். அப்பேற்பட்ட வள்ளல் திருவேங்கடவன்-எம்பெருமாள். அவன் எழுந்தருளி இருக்கும் வேங்கடமே சோலைகள் சூழ்ந்து நறுமணம் வீசீகொண்டே பக்தர்கள் மனதை மகிழ வைத்து உலகுக்கே ஒளிதரும் திலகமாய் திகழ்வது-ஆதலால் நெஞ்சே! அந்த திருமலையை போய் அடைவாய்!

                                                                       பெரிய திருமொழி.

1. அகிஞ்சந நிதிம் ஸூதி மபவர்க்க த்ரிவர்க்கயோ:
    அஞ்ஜநாத்ரிச்வர தயா மபிஷ்டௌமி நிரஞ்ஜநாம் //


திருவேங்கடமலைக்கு அஞ்ஜனாத்ரி என்ற பெயரும் உண்டு.  இம்மலை ஸ்ரீனிவாசனுடைய கருணையாலேயே உருவானது. இம்மலையில் வாசம் செய்யும் ஸ்ரீனிவாசன்- கருணை அறம், பொருள், இன்பம் எல்லாவற்றிர்கும் விளை நிலமாகவும், எவ்வகை குற்றமற்றதாகவும், உயர்வு, தாழ்வு என்று பாராமல் பரவி கிடக்கின்றது. நமக்கு எது வேண்டுமோ-ப்ரப்த்தி, மோக்ஷ சாம்ராஜ்யம்-அதை அளிக்கவல்லது.

                                                            ஸ்வாமி தேசிகன்-தயா சதகம்

சேதநர்கள்:

ஒரு சமயம் அடியேன் ஒரு வேகத்தில் இருந்த வேலையை விட்டுவிட்டேன்( கடந்த காலம் ). குடும்பம் சாதாரண நிலையில் இருந்த காலம். அடுத்த வேளைக்கு திண்டாட்டம். ஒரே கலக்கம். வேதனை. அருகில் இருந்த ஸ்ரீனிவாசன் கோயிலுக்கு ஓடினேன். என் கவலையெல்லாம் அவன் காலடியில் கொட்டி தீர்த்தேன். அடுத்த நாள் காலையில் எனக்கு போன் வந்தது-உடனே வந்து வேலையில் சேரவும் என்று-என்னே அவன் கருணை.

2. தாயே தந்தை என்றும்
    தாரமேகிளை மக்கள் என்றும்
   நோயே பட்டொழிந்தேன்
   நுண்ணை காண்பதோர் ஆசையினால்
  வேயேய் பூம்பொழில்சூழ்
  விரையார் திருவேங்கடவா!
  நாயேன் வந்து அடைந்தேன்
  நல்கி ஆள் என்னைக் கொண்டருளே!


தாயே என்றும், தந்தையே என்றும், மக்களே என்றும் உறவில்லாதவர்களை எல்லாம் நினைத்து துன்புற்றேன். அதனால் ஒரு பலனுமின்றி கெட்டொழிந்தேன். நாய் போன்றவனான நான் உன்னை வணங்கவேண்டும் என்ற ஆசையால் உன்னை சரணமடைந்தேன். திருவேங்கடவா! அடியவனாகிய என்னை குளிர கடாக்ஷித்து அருளவேண்டும்.

                                                                 பெரிய திருமொழி.

2. அபி நிகில ஸுசரித
    முஷ்டிந்தய துரித மூர்ச்சநா ஜுஷ்டம்
    ஸஞ்ஜீவயது தயே மாம்
    அஞ் ஜந கிரிநாத ரஞ் ஜநீ பவதீ //


திருவேங்கடமுடையானை மகிழ்விக்கின்ற தயா தேவியே!  பாபங்களையே செய்து மயங்கி கிடக்கும் அடியேனை-எல்லா புண்யங்களையும் ஒரு பிடியாக பருகவல்ல-நீ என்னை காத்தருள்.

                                                                               ஸ்வாமி தேசிகன்-தயா சதகம்

சேதனன்:

புது மோகத்தாலும் அகங்காரத்தாலும், திமிரினாலும் நான் சில காலம் உன்னை நினைக்காமல் மயங்கி கிடந்தேன். அடிமேல் அடி விழுந்தது. வேறு கதியில்லை எனக்கு. உன் திருவடியை பற்றினேன். என்னை உதரி தள்ளாமல் கை கொடுத்து தூக்கி நின் பால் இழுத்துக்கொண்டாயே-உன் கருணையே கருணை.

3. தெரியேன் பாலகனாய்ப் பல தீமைகள் செய்துமிட்டேன்
    பெரியேன் ஆயினபின் பிறர்க்கே ஏழையானேன்;
    கரிசேர் பூம்புழில்சூழ் கனமாமலை வேங்கடவா!
    அரியே! வந்து அடைந்தேன். அடியேனை ஆட்கொண்டருளே!

திருமலையில் வாழ்பவனே! திரு வேங்கடவா! நான் சிறுபிள்ளையாய் இருந்தபோது செய்ய தகாதவை எது என்று அறியாமல் கிடந்தேன். சிறிது அறிவு பிறந்ததும் பலவாறு தீமைகளை செய்து திரிந்தேன். பிறகு இளமை வந்தபோது பெண்கள் மாயையில் சிக்கி தவித்தேன். யானைகள் நிறைந்த பூஞ்சோலைகள் சூழ்ந்த திருமலையில் எழுந்தருளி இருக்கும் திருவேங்கடவா! இன்று உன் திருவடிகளை தஞ்சம் அடைகின்றேன். இனி பிறருக்கு உழைக்காமல் உனக்கே பணிசெய்யுமாறு அடியேனை ஆட்கொண்டருள்வாயாக.

                                                                                                        பெரிய திருமொழி.

3. அஹமஸ்ம் யபராத சக்கிரவர்த்தீ
       கருணே! த்வம் ச குணேஷு ஸார்வபௌமி
    விதூஷீ ஸ்த்திதி மீத்ரும் ஸ்வயம் மாம்
      வ்ருஷ சைலேச்வர பாதஸாத் குரு த்வம் //

 நான் பாபங்களுக்கெல்லாம் சக்கரவர்த்தியாக இருக்கிறேன். நீயோ குணங்களுக்கெல்லாம சக்கரவர்த்தி. த்யாதேவியே! இந்த இரண்டிற்கும் வித்யாஸம் அறிந்த நீ-என் பாபங்ககளை பொருட்படுத்தாது, என் நிலைமையை அறிந்து என்னை திருவேங்கடநாதன் திருவடியில் கீழ் அமரும்படி அருள் செய்.

                                                                                  ஸ்வாமி தேசிகன்-தயா சதகம்.

சேதநர்கள்:

எப்பேற்ப்பட்ட கஷ்டம் வந்தாலும் அதை திருவேங்கடவன் திருவடியில் சரணம் அடைந்துவிட்டால் அந்த பாபங்கள் எல்லாம் ஒரு நொடியில் போய்விடும். இதை பலரது வாழ்வில் காணலாம். வேங்கடேசன் கருணை ஆற்று வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடும் அதை தடுக்க அணை போடமுடியாது.

R.Jagannathan.

Tuesday, November 16, 2010

வேங்கடமும் வேங்கடநாதனும்-1

வேங்கடமும் வேங்கடநாதனும்-1



அரங்கமும், அரங்கநாதனுடைய பரிபூர்ண அழகையையும் அநுபவித்தோம். பூலோக வைகுண்டமெனும் ஸ்ரீரங்க திவ்ய தேச யாத்திரையை தொடங்கி-மேலே திருவேங்கடநாதனை ஆழ்வார்களும் ஆசார்யர்களும், சேதநகர்களும் எப்படி அநுபவிக்கிறார்கள் என்று அவர்களோடு நாமும் அநுபவிப்போம்.

1. தையொரு திங்களும் தரைவிளக்கித்
        தண்டமண்டலம் இட்டு மாசி முன்னாள்
   ஐயனுண்மணல் கொண்டு தெரு அணிந்து
        அழகினுக்கு அல்ங்கரித்து, அனங்க்கதேவா!
  உய்யவும் ஆம்கொலோ? என்று சொல்லி
        உன்னையும் உம்பியையும் திழுதேன்;
  வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக்கை
        வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே //

                                                                          நாச்சியார் திருமொழி-1-1
ஆண்டாள் மார்கழி நோம்பு கண்ணனை அடைவதற்காக நூற்றாள். ஸ்ரீவில்லி-புத்தூரையே திருவாய்பாடியாக நினைத்து- கண்ணா நீ வரும் பாதை, வீதிகளையும் புதுமணல் கொண்டு அலங்கரித்தேன், அழகாக கோலம் இட்டேன், காமனை தொழுதாவது உன்னையும், உன் தம்பியையும் வணங்கினேன். வெய்யதான ஒப்பற்ற சக்கிரப்படையை கையில் தாங்கி நிற்கும் வேங்கடவனுக்கு நான் கைங்கரியம் செய்யும்படி என்னை விதிக்கமாட்டாயா? எப்படியாவது கண்ணனை அடையவேண்டும் என்று ஆரா காதல் கொண்டாள் கோதை. ஆயர்பாடியில் கண்ணனோடு காதல் கொண்ட ராதையாகவே தன்னை பாவித்துக்கொண்டாள் ஆண்டாள்.

1. ப்ரபத்யே தம் கிரிம் ப்ராய: ஸ்ரீநிவாஸாநு கம்ப்யா /
    இக்ஷுஸாரஸ்ரவந்த்யேவ யந்மூர்த்யா சர்க்கராயிதம் //


ஸ்வாமி தேசிகன் வைஷ்ணவ உலகுக்கு செய்திருக்கும் தொண்டு காலத்தால் அழியாதது. ராமானுஜ சம்பிரதாயத்தை கட்டி காத்து வலுவூட்டி நாம் எல்லோரும் சுலபமாக கடைபிடிக்க பல அரிய பாசுரங்களையும்-முக்கியமாக திருவேங்கடமுடையானது தயையை மையமாக வைத்து அருளிய தயாசதகம் பக்தர்களின் உள்ளத்தில் ஆழமாக பதிந்துவிட்டது.

ஸ்ரீனிவாஸனுடைய எல்லையற்ற கருணை பக்தர்களிடம் வெள்ளமிட்டு ஓடுகின்றது. இந்த கருணை கரும்புபோல் இனிக்கும். கரும்பு சாறு சர்க்கரை மாதிரி கெட்டியாக மாறுவதுபோல், ஸ்ரீனிவாஸனுடைய கருணையெனும் சாறு திருவேங்கடமேன்னும் வடிவு கொண்டு உறைந்து சர்க்கரையாக எல்லோரும் அநுபவிக்க ஏற்றதாய் உள்ளது. கருணையே திருவேங்கடம். அடியார்களின் குற்றங்களை பொறுத்து வேண்டிய பலங்களை எல்லாம் அளிக்கவல்லது. ஆற்று வெள்ளம்போல் தடையற்று அடியார்களின் மீது பெருகுவது. இத்தகைய பெருமை மிக்க திருமலையை சரணமடைகின்றேன்.

                                                                                ஸ்வாமி தேசிகன்-தயா சதகம்.

2. ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
      வான் ஆளும் செல்வமும் மண்ணகரம் யான் வேண்டேன்;
    தேன் ஆர் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்
     மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே.


இளமை மாறாத அரம்பை போன்ற தேவ மாதர்கள் வந்து என்னை சூழ்ந்திருந்தாலும், சுவர்க்கத்தை ஆளுகிற செல்வம் கிடைத்தாலும், இம்மண்ணுலகமே கிடைத்தாலும்- இவையாவும் எனக்கு வேண்டாம். எனக்கு தேன் நிறைந்த பூஞ்சோலைகளுடைய திருவேங்கடமென்னும் மலைமீதுள்ள நீர் சுனையில் மீனாகவாவது பிறக்கும் பாக்கியத்தை அருள்வாய் திருவேங்கடவா!

                                                            குலசேகர ஆழ்வார்-பெருமாள்திருமொழி.

2. க்ருதிந: கமலாவாஸ காருண்யைகாந்திநோ பஜே /
    தத்தே யத்ஸூக்திரூபேண த்ரிவேதி ஸர்வ யோக்யதாம்/ -


ஸ்ரீனிவாசனது கருணையை பற்றுக்கொண்டவர்களான, பாக்கியசாலிகளான, மூன்று வேதங்களின்- யுக்-யஜுர், சாம வேதம், பொருளை மூன்று ஜாதியினரே கற்க சாஸ்திரம் இடம் கொடுத்து இருக்கிறது. அதன் பொருளை எல்லா ஜாதியினரும் கற்க உறு துணையாக ஆழ்வார்கள் நாலாயிரம் திவ்ய ப்ரபந்தத்தை அருளி செய்து எல்லோரும் பயன்பட செய்தார்கள்-ஸ்ரீனிவாசனின் கருணை உள்ளத்தாலே- இவைகளை திரட்டி தந்த ஆழ்வார்களை வழிபடுகின்றேன்.

                                                             ஸ்வாமி தேசிகன்- தயா சதகம்.

3. செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
     நெடியானே! வேங்கடவா! நின்கோயிலின் வாசல்
     அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
     படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனே!


செடிபோல அடர்ந்துள்ள- எல்லா கொடிய வினைகளையும் போக்கியருளுகின்ற திருமாலே, பெரியோனே! திருவேங்கடவனே! உன் கோயில் வாசலில் உன்னை வணங்கவரும் அடியார்களும், தேவர்களும், அரம்பை போன்ற தேவதைகள் கிடந்தும், நடந்தும் செல்லும்படியாக கிடந்து உன் பவளவாய் காண்பேனாக.

                                                                              குலசேகர ஆழ்வார்- பெருமாள் திருமொழி.

சேதனர்கள்:

கோவிந்தா! என்னும் சொல் கேட்டால் ஓடி வந்துவிடுவான் கோவிந்தன்-பக்தர்களின் இடையூறுகளை அகற்ற. அதனால் தான் கோவிந்தன் உண்டியல் என்றுமே நிறைந்திருக்கும். காணிக்கை கூடம் ஜே! ஜே! என்று இருக்கும். பக்தர்களின் சகாயம் அவன்.100-அடி தூரத்தில் நிற்றிருந்தாலும் கோவிந்தன் நம் அருகில் தான் இருந்து சேவை சாதிப்பான். கள்ளம் கபடே இல்லாத பாமர மக்களிடம் தான் அவன் அன்பு வெள்ளம் போல் கரை புறண்டு ஓடும். வேங்கடவன் பேர் சொன்னால் போதும் அங்கு எப்போதும் அமைதி தான்! ஆனந்தம் தான்! வெகு தூரத்தில் தெரியும் வேங்கட மலையை கண்டால் கோவிந்தனை கண்ட ஆனந்தம்.

R.Jagannathan.