Thursday, November 25, 2010

வேங்கடமும், வேங்கடேசனும்-2

வேங்கடமும், வேங்கடேசனும்-2



1. பேசும் இன் திருநாமம் எட்டெழுத்தும்
    சொல்லி நின்று பின்னரும்
    பேசுவார் தமை உய்ய வாங்கிப்
    பிறப்பறுக்கும் பிரான்- இடம்
    வாச மாமலர் நாறுவார்பொழில்
    சூழ்தரும் உலகுக்கு எலாம்
    தேசமாய் திகழும் மலைத்திரு
    வேங்கடம் அடை நெஞ்சமே!


என் நெஞ்சமே! நாம் எல்லோரும் சொல்லும் நாமம் இனிய நாமம்-நமோ நாராயணா! என்னும் திருவெட்டெழுத்து மந்திரம். அதை ஒரு தடவை சொன்னாலே போதும்-நம்முடைய கவலைகள், இடர்கள் எல்லாம் பறந்து போய்விடும். அப்பேற்பட்ட வள்ளல் திருவேங்கடவன்-எம்பெருமாள். அவன் எழுந்தருளி இருக்கும் வேங்கடமே சோலைகள் சூழ்ந்து நறுமணம் வீசீகொண்டே பக்தர்கள் மனதை மகிழ வைத்து உலகுக்கே ஒளிதரும் திலகமாய் திகழ்வது-ஆதலால் நெஞ்சே! அந்த திருமலையை போய் அடைவாய்!

                                                                       பெரிய திருமொழி.

1. அகிஞ்சந நிதிம் ஸூதி மபவர்க்க த்ரிவர்க்கயோ:
    அஞ்ஜநாத்ரிச்வர தயா மபிஷ்டௌமி நிரஞ்ஜநாம் //


திருவேங்கடமலைக்கு அஞ்ஜனாத்ரி என்ற பெயரும் உண்டு.  இம்மலை ஸ்ரீனிவாசனுடைய கருணையாலேயே உருவானது. இம்மலையில் வாசம் செய்யும் ஸ்ரீனிவாசன்- கருணை அறம், பொருள், இன்பம் எல்லாவற்றிர்கும் விளை நிலமாகவும், எவ்வகை குற்றமற்றதாகவும், உயர்வு, தாழ்வு என்று பாராமல் பரவி கிடக்கின்றது. நமக்கு எது வேண்டுமோ-ப்ரப்த்தி, மோக்ஷ சாம்ராஜ்யம்-அதை அளிக்கவல்லது.

                                                            ஸ்வாமி தேசிகன்-தயா சதகம்

சேதநர்கள்:

ஒரு சமயம் அடியேன் ஒரு வேகத்தில் இருந்த வேலையை விட்டுவிட்டேன்( கடந்த காலம் ). குடும்பம் சாதாரண நிலையில் இருந்த காலம். அடுத்த வேளைக்கு திண்டாட்டம். ஒரே கலக்கம். வேதனை. அருகில் இருந்த ஸ்ரீனிவாசன் கோயிலுக்கு ஓடினேன். என் கவலையெல்லாம் அவன் காலடியில் கொட்டி தீர்த்தேன். அடுத்த நாள் காலையில் எனக்கு போன் வந்தது-உடனே வந்து வேலையில் சேரவும் என்று-என்னே அவன் கருணை.

2. தாயே தந்தை என்றும்
    தாரமேகிளை மக்கள் என்றும்
   நோயே பட்டொழிந்தேன்
   நுண்ணை காண்பதோர் ஆசையினால்
  வேயேய் பூம்பொழில்சூழ்
  விரையார் திருவேங்கடவா!
  நாயேன் வந்து அடைந்தேன்
  நல்கி ஆள் என்னைக் கொண்டருளே!


தாயே என்றும், தந்தையே என்றும், மக்களே என்றும் உறவில்லாதவர்களை எல்லாம் நினைத்து துன்புற்றேன். அதனால் ஒரு பலனுமின்றி கெட்டொழிந்தேன். நாய் போன்றவனான நான் உன்னை வணங்கவேண்டும் என்ற ஆசையால் உன்னை சரணமடைந்தேன். திருவேங்கடவா! அடியவனாகிய என்னை குளிர கடாக்ஷித்து அருளவேண்டும்.

                                                                 பெரிய திருமொழி.

2. அபி நிகில ஸுசரித
    முஷ்டிந்தய துரித மூர்ச்சநா ஜுஷ்டம்
    ஸஞ்ஜீவயது தயே மாம்
    அஞ் ஜந கிரிநாத ரஞ் ஜநீ பவதீ //


திருவேங்கடமுடையானை மகிழ்விக்கின்ற தயா தேவியே!  பாபங்களையே செய்து மயங்கி கிடக்கும் அடியேனை-எல்லா புண்யங்களையும் ஒரு பிடியாக பருகவல்ல-நீ என்னை காத்தருள்.

                                                                               ஸ்வாமி தேசிகன்-தயா சதகம்

சேதனன்:

புது மோகத்தாலும் அகங்காரத்தாலும், திமிரினாலும் நான் சில காலம் உன்னை நினைக்காமல் மயங்கி கிடந்தேன். அடிமேல் அடி விழுந்தது. வேறு கதியில்லை எனக்கு. உன் திருவடியை பற்றினேன். என்னை உதரி தள்ளாமல் கை கொடுத்து தூக்கி நின் பால் இழுத்துக்கொண்டாயே-உன் கருணையே கருணை.

3. தெரியேன் பாலகனாய்ப் பல தீமைகள் செய்துமிட்டேன்
    பெரியேன் ஆயினபின் பிறர்க்கே ஏழையானேன்;
    கரிசேர் பூம்புழில்சூழ் கனமாமலை வேங்கடவா!
    அரியே! வந்து அடைந்தேன். அடியேனை ஆட்கொண்டருளே!

திருமலையில் வாழ்பவனே! திரு வேங்கடவா! நான் சிறுபிள்ளையாய் இருந்தபோது செய்ய தகாதவை எது என்று அறியாமல் கிடந்தேன். சிறிது அறிவு பிறந்ததும் பலவாறு தீமைகளை செய்து திரிந்தேன். பிறகு இளமை வந்தபோது பெண்கள் மாயையில் சிக்கி தவித்தேன். யானைகள் நிறைந்த பூஞ்சோலைகள் சூழ்ந்த திருமலையில் எழுந்தருளி இருக்கும் திருவேங்கடவா! இன்று உன் திருவடிகளை தஞ்சம் அடைகின்றேன். இனி பிறருக்கு உழைக்காமல் உனக்கே பணிசெய்யுமாறு அடியேனை ஆட்கொண்டருள்வாயாக.

                                                                                                        பெரிய திருமொழி.

3. அஹமஸ்ம் யபராத சக்கிரவர்த்தீ
       கருணே! த்வம் ச குணேஷு ஸார்வபௌமி
    விதூஷீ ஸ்த்திதி மீத்ரும் ஸ்வயம் மாம்
      வ்ருஷ சைலேச்வர பாதஸாத் குரு த்வம் //

 நான் பாபங்களுக்கெல்லாம் சக்கரவர்த்தியாக இருக்கிறேன். நீயோ குணங்களுக்கெல்லாம சக்கரவர்த்தி. த்யாதேவியே! இந்த இரண்டிற்கும் வித்யாஸம் அறிந்த நீ-என் பாபங்ககளை பொருட்படுத்தாது, என் நிலைமையை அறிந்து என்னை திருவேங்கடநாதன் திருவடியில் கீழ் அமரும்படி அருள் செய்.

                                                                                  ஸ்வாமி தேசிகன்-தயா சதகம்.

சேதநர்கள்:

எப்பேற்ப்பட்ட கஷ்டம் வந்தாலும் அதை திருவேங்கடவன் திருவடியில் சரணம் அடைந்துவிட்டால் அந்த பாபங்கள் எல்லாம் ஒரு நொடியில் போய்விடும். இதை பலரது வாழ்வில் காணலாம். வேங்கடேசன் கருணை ஆற்று வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடும் அதை தடுக்க அணை போடமுடியாது.

R.Jagannathan.

No comments:

Post a Comment