Tuesday, November 16, 2010

வேங்கடமும் வேங்கடநாதனும்-1

வேங்கடமும் வேங்கடநாதனும்-1



அரங்கமும், அரங்கநாதனுடைய பரிபூர்ண அழகையையும் அநுபவித்தோம். பூலோக வைகுண்டமெனும் ஸ்ரீரங்க திவ்ய தேச யாத்திரையை தொடங்கி-மேலே திருவேங்கடநாதனை ஆழ்வார்களும் ஆசார்யர்களும், சேதநகர்களும் எப்படி அநுபவிக்கிறார்கள் என்று அவர்களோடு நாமும் அநுபவிப்போம்.

1. தையொரு திங்களும் தரைவிளக்கித்
        தண்டமண்டலம் இட்டு மாசி முன்னாள்
   ஐயனுண்மணல் கொண்டு தெரு அணிந்து
        அழகினுக்கு அல்ங்கரித்து, அனங்க்கதேவா!
  உய்யவும் ஆம்கொலோ? என்று சொல்லி
        உன்னையும் உம்பியையும் திழுதேன்;
  வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக்கை
        வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே //

                                                                          நாச்சியார் திருமொழி-1-1
ஆண்டாள் மார்கழி நோம்பு கண்ணனை அடைவதற்காக நூற்றாள். ஸ்ரீவில்லி-புத்தூரையே திருவாய்பாடியாக நினைத்து- கண்ணா நீ வரும் பாதை, வீதிகளையும் புதுமணல் கொண்டு அலங்கரித்தேன், அழகாக கோலம் இட்டேன், காமனை தொழுதாவது உன்னையும், உன் தம்பியையும் வணங்கினேன். வெய்யதான ஒப்பற்ற சக்கிரப்படையை கையில் தாங்கி நிற்கும் வேங்கடவனுக்கு நான் கைங்கரியம் செய்யும்படி என்னை விதிக்கமாட்டாயா? எப்படியாவது கண்ணனை அடையவேண்டும் என்று ஆரா காதல் கொண்டாள் கோதை. ஆயர்பாடியில் கண்ணனோடு காதல் கொண்ட ராதையாகவே தன்னை பாவித்துக்கொண்டாள் ஆண்டாள்.

1. ப்ரபத்யே தம் கிரிம் ப்ராய: ஸ்ரீநிவாஸாநு கம்ப்யா /
    இக்ஷுஸாரஸ்ரவந்த்யேவ யந்மூர்த்யா சர்க்கராயிதம் //


ஸ்வாமி தேசிகன் வைஷ்ணவ உலகுக்கு செய்திருக்கும் தொண்டு காலத்தால் அழியாதது. ராமானுஜ சம்பிரதாயத்தை கட்டி காத்து வலுவூட்டி நாம் எல்லோரும் சுலபமாக கடைபிடிக்க பல அரிய பாசுரங்களையும்-முக்கியமாக திருவேங்கடமுடையானது தயையை மையமாக வைத்து அருளிய தயாசதகம் பக்தர்களின் உள்ளத்தில் ஆழமாக பதிந்துவிட்டது.

ஸ்ரீனிவாஸனுடைய எல்லையற்ற கருணை பக்தர்களிடம் வெள்ளமிட்டு ஓடுகின்றது. இந்த கருணை கரும்புபோல் இனிக்கும். கரும்பு சாறு சர்க்கரை மாதிரி கெட்டியாக மாறுவதுபோல், ஸ்ரீனிவாஸனுடைய கருணையெனும் சாறு திருவேங்கடமேன்னும் வடிவு கொண்டு உறைந்து சர்க்கரையாக எல்லோரும் அநுபவிக்க ஏற்றதாய் உள்ளது. கருணையே திருவேங்கடம். அடியார்களின் குற்றங்களை பொறுத்து வேண்டிய பலங்களை எல்லாம் அளிக்கவல்லது. ஆற்று வெள்ளம்போல் தடையற்று அடியார்களின் மீது பெருகுவது. இத்தகைய பெருமை மிக்க திருமலையை சரணமடைகின்றேன்.

                                                                                ஸ்வாமி தேசிகன்-தயா சதகம்.

2. ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
      வான் ஆளும் செல்வமும் மண்ணகரம் யான் வேண்டேன்;
    தேன் ஆர் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்
     மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே.


இளமை மாறாத அரம்பை போன்ற தேவ மாதர்கள் வந்து என்னை சூழ்ந்திருந்தாலும், சுவர்க்கத்தை ஆளுகிற செல்வம் கிடைத்தாலும், இம்மண்ணுலகமே கிடைத்தாலும்- இவையாவும் எனக்கு வேண்டாம். எனக்கு தேன் நிறைந்த பூஞ்சோலைகளுடைய திருவேங்கடமென்னும் மலைமீதுள்ள நீர் சுனையில் மீனாகவாவது பிறக்கும் பாக்கியத்தை அருள்வாய் திருவேங்கடவா!

                                                            குலசேகர ஆழ்வார்-பெருமாள்திருமொழி.

2. க்ருதிந: கமலாவாஸ காருண்யைகாந்திநோ பஜே /
    தத்தே யத்ஸூக்திரூபேண த்ரிவேதி ஸர்வ யோக்யதாம்/ -


ஸ்ரீனிவாசனது கருணையை பற்றுக்கொண்டவர்களான, பாக்கியசாலிகளான, மூன்று வேதங்களின்- யுக்-யஜுர், சாம வேதம், பொருளை மூன்று ஜாதியினரே கற்க சாஸ்திரம் இடம் கொடுத்து இருக்கிறது. அதன் பொருளை எல்லா ஜாதியினரும் கற்க உறு துணையாக ஆழ்வார்கள் நாலாயிரம் திவ்ய ப்ரபந்தத்தை அருளி செய்து எல்லோரும் பயன்பட செய்தார்கள்-ஸ்ரீனிவாசனின் கருணை உள்ளத்தாலே- இவைகளை திரட்டி தந்த ஆழ்வார்களை வழிபடுகின்றேன்.

                                                             ஸ்வாமி தேசிகன்- தயா சதகம்.

3. செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
     நெடியானே! வேங்கடவா! நின்கோயிலின் வாசல்
     அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
     படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனே!


செடிபோல அடர்ந்துள்ள- எல்லா கொடிய வினைகளையும் போக்கியருளுகின்ற திருமாலே, பெரியோனே! திருவேங்கடவனே! உன் கோயில் வாசலில் உன்னை வணங்கவரும் அடியார்களும், தேவர்களும், அரம்பை போன்ற தேவதைகள் கிடந்தும், நடந்தும் செல்லும்படியாக கிடந்து உன் பவளவாய் காண்பேனாக.

                                                                              குலசேகர ஆழ்வார்- பெருமாள் திருமொழி.

சேதனர்கள்:

கோவிந்தா! என்னும் சொல் கேட்டால் ஓடி வந்துவிடுவான் கோவிந்தன்-பக்தர்களின் இடையூறுகளை அகற்ற. அதனால் தான் கோவிந்தன் உண்டியல் என்றுமே நிறைந்திருக்கும். காணிக்கை கூடம் ஜே! ஜே! என்று இருக்கும். பக்தர்களின் சகாயம் அவன்.100-அடி தூரத்தில் நிற்றிருந்தாலும் கோவிந்தன் நம் அருகில் தான் இருந்து சேவை சாதிப்பான். கள்ளம் கபடே இல்லாத பாமர மக்களிடம் தான் அவன் அன்பு வெள்ளம் போல் கரை புறண்டு ஓடும். வேங்கடவன் பேர் சொன்னால் போதும் அங்கு எப்போதும் அமைதி தான்! ஆனந்தம் தான்! வெகு தூரத்தில் தெரியும் வேங்கட மலையை கண்டால் கோவிந்தனை கண்ட ஆனந்தம்.

R.Jagannathan.

No comments:

Post a Comment