Saturday, March 26, 2011

அத்தகிரியும், அருளாளனும்- 3

அத்தகிரியும், அருளாளனும்- 3

1.ஆண் அல்லன்; பெண் அல்லன்; அல்லா அலியும் அல்லன்
காணலும் ஆகான்; உளன் அல்லன்; இல்லை அல்லன்;
பேணுங்கால் பேணும் உரு ஆகும்; அல்லன் ஆம்
கோணை பெரிது உடைத்து எம் பெம்மானை கூறுதலே //
திருவாய்மொழி
எம்பெருமான் எப்படி இருப்பான்: ஆணா, பெண்ணா, அல்லது அலியா-இவர்கள் யாரும் இல்லை.
அவன் வடிவம் யாராலும் சொல்ல முடியாது. அவனை காண்பதற்கு இயலாது. உள்ளவன் அல்லன், இல்லாதவனும் அல்லன்-ஆனால் பக்தர்கள் விரும்பும் காலத்தில் அவர்கள் விரும்பும் வடிவில் இருப்பன். தன்னை ஆச்ரயிக்காதவற்கு அவன் கிடைப்பதற்கு அரிதாக இருப்பான்.

1. ஆஹூயமாநம் அநபாய விபூதி காமை:
ஆலோக லுப்த ஜகதாந்த்ய மநுஸ்மரேயம் /
ஆலோகிதாம்சுக மநாகுல ஹேதி ஜாலம்
ஹைரண்யகர்ப்ப ஹயமேத ஹவிர்புஜம் த்வாம் //
ஸ்வாமி தேசிகன்- வரதராஜ பஞ்சாசத்/
அருளாள பெருமானே! பிரமன் கெய்த அசுவமேத யாகத்தில் அவன் தந்த ஹவிஸ்ஸை அமுது செய்தாய்-அப்படி செய்து யாக குண்டத்தில் அக்னி போல் காட்சி தந்தாய்.என்னாலும் அழியாத மோட்சத்தை விரும்புபவர்கள் உன்னிடம் சரணாகதி அடைந்து ஆத்மாவை சமர்ப்பிவிப்பார்கள். நீ உன் கடாக்ஷத்தால் உலகில் இருளை போக்குகின்றாய்.அக்னிபோல் செம்மை நிறமாக காணுகின்றாய். உன் திருவாயுதங்களோ மிக சாந்தமாக இருக்கின்றது. இப்படி அக்னி போல் உன்னை நான் சதா சிந்தித்துக்கொண்டே இருப்பேன்.

2. என்றும் மறந்தறியேன் ; ஏழ்பிறப்பும் எப்பொழுதும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் -வென்றி
அடல் ஆழி கொண்ட அறிவனே-இன்பக்
கடல்-ஆழிநீ அருளிக் காண் //
இரண்டாம் திருவந்தாதி
ஆழ்வார் பகவானையே உபாயமாக பற்றி அவனை பெறுவதற்கு அவனே அருள் செய்யவேண்டும் என்று ப்ரார்த்திக்கிறார்.
என்னுடைய எல்லா பிறப்புகளிலும் எல்லா காலத்திலும் என்னை பற்றிய நினைப்பு உனக்கு என்றும் இருக்கிறது. அதனால் தான் நான் இந்த பிறப்பில் உன்னை என்றும் மறந்ததில்லை. அது என்னால் வந்தது அல்ல. அது உன்னாலேயே தான். இனி நான் உன்னை அடைய நீயே வழி காண்பிக்கவேண்டும்

2. ஔதந்வதே மஹதி ஸத்மநி பாஸமாநே
ச்லாக்யே ச திவ்ய ஸதனே தமஸ: பரஸ்மிந்
அந்த: களேபர மிதம் ஸுஷிரம் ஸுஸூக்ஷ்மம்
ஜாதம் கரீச கத மாதரணாஸ்பதம் தே //
ஸ்வாமி தேசிகன்- வரதராஜ பஞ்சாசத் //
பேராளபெருமானே! உனக்கு உறைவிடங்கள் பல உள்ளன. பாற்கடல் உள்ளது, ஸ்ரீவைகுண்டத்தில் திருமாமணி மண்டபம் உள்ளது. இவையெல்லாம் ஒரு பொருட்டு இல்லை உனக்கு. நீயோ மனித இதயமே மிக உயர்ந்ததாய் அதனுள் உறைகின்றாய். மிக இழிவான இந்த மனித உடலில் இதயத்தில் உறைந்து அவனை கடை தேற எவ்வளவு பாடு படுகிறாய். அதற்கு ஒரே காரணம் அவனிடம் நீ காட்டும் இரக்கம், அன்பு.

3. பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவிமலர் என்னும் காண்தோறும்- பாவியேன்
மெல் ஆவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரான் உருவே என்று //
பெரிய திருவந்தாதி
பூவைப்பூ, காயாம்பூ, கரு நெய்தல் செங்கழு நீர்ப்பூ இவைகளெல்லாம் காணும்போது அவைகள் எல்லாம் இறைவனது வடிவத்தையே நினைவூட்டுகிறது. இவையல்லாம் உனது திருமேனியே என்று இந்த பாவி பூரித்து நிற்கிறேன். இவையெல்லாம் நான் அநுபவிக்க நீயல்லவோ எனக்கு அளித்தது என்கிறார் ஆழ்வார்.

3. பாலாக்ருதேர் வட பலாச மிதஸ்ய யஸ்ய
ப்ரஹ்மாண்ட மண்டல மபூ துதரைக தேசே
தஸ்யைவ தத் வரத ஹந்த கதம் ப்ரபூதம்
வராஹ மாஸ்த்திதவதோ வபு ரத்புதம் தே //
ஸ்வாமி தேசிகன்-வரதராஜ பஞ்சாசத் //

பேரருளாள பெருமானே! நீ பாலகனாய் ஆலிலை மேல் உறங்கும் பொழுது இந்த உலகமெல்லாம் உன் வயிற்றில் அடக்கிக்கொண்டாய்- சிறுவடிவில் மகத்தான காரியம். அற்புதமான தோற்றம். நீ பெரிய வராஹமாக தோன்றியபோதும் இந்த ப்ரஹ்மாண்டமே உன்னிடத்தில் அடங்கி கிடந்தது. இவையெல்லாம் உன் திருவிளையாடல் செயல்கள்- உன் சக்தியால் தான் செய்யமுடியும்.

R.Jagannathan.

No comments:

Post a Comment