Tuesday, April 26, 2011

அத்தகிரியும் அருளாளனும்-4

அத்தகிரியும் அருளாளனும்-4

1. அறிவென்னும் தாள்கொளுவி, ஐம்புலனும் தம்மில்
செறிவென்னும் திண்கதவம் செம்மி- மறை என்னும்
நங்கோதி, நங்குணர்வார் காண்பரே, நாடோறும்
பைங்கோத வண்ணன் அடி //

வேதங்களை இடைவிடாது ஓதி அவற்றின் பொருள்களையும் நங்குணர்ந்து, ஐம்புலங்களையும் தம்வழியே செல்லவிடாதபடி திண்ணிய கடவையடைத்து, ஞானமென்னும் தாழ்பாளையிட்டு, நன்றாக த்யானம் செய்பவர்களே- பச்சை நிறத்தையுடைய கடல்வண்ணனான எம்பெருமானை நாள்தோறும் கண்டு அநுபவிக்க பெறுவார்கள்

மூன்றாம் திருவந்தாதி.

1. உத்தம வமர்த்தலம் அமைத்ததோர்
எழில் தனுவுயர்த்த கணையால்
அத்திவரக்கன் - முடிபத்தும் ஒரு
கொத்தென உதிர்த்த திறலோன்
மத்துறு மிகுத்த தயிர் மொய்த்தவெணெய்
வைத்ததுணும் அத்தனிடமாம்
அறுக்கும் அணி அத்தஸ்கிரியே //

உயர்ந்த போர்களத்தில் அமைக்கப்பெற்ற அழகிய வில்லினின்று விடப்பெற்ற அம்பினால் அஸ்த்ர பலமுள்ள ராவணனின் தலைகள் பத்தையும் ஒரு குலையாக அறுத்த ராமனும்; மத்தினால் கடையப்பட்ட தயிரையும், வெண்ணையையும் உண்ட கண்ணன்-ஆகிய இருவருமான என் ஸ்வாமி ஹஸ்தகிரி எனும் காஞ்சியில் பக்தர்களுடைய பாபங்களை அறவே ஒழித்து நமக்காக அருள் பாலிக்க குடிகொண்டிருக்கும் க்ஷேத்திரமே அத்தகிரி.

ஸ்வாமி தேசிகன்- ஹஸ்தகிரி மஹாத்மியம்.

2. பொங்கு புணரிக் கடல்சூழ் ஆடை
நிலமாமகள், மலர்மா
மங்கை, பிரமன், சிவன் இந் திரன்வா
நவர்நா யகர் ஆய
எங்கள் அடிகள், இமையோர் தலைவ
ருடைய திருநாமம்
நங்கள் வினைகள் தவிர உரைமின்
நமோ நா ராயணமே //

அலைகடலை ஆடையாகவுடைய பூமி பிராட்டிக்கும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பெரிய பிராட்டிக்கும், பிரமன், சிவன், இந்திரன் மற்றும் உள்ள தேவர்களுக்கும் தலைவன் எங்கள் நாயகன், நித்ய சூரிகளுக்கு அதிபதி. குறைவற்றவர்களுக்கும், குறைவுடையவர்கள் எல்லோருக்கும் வேற்றுமை இன்றி தலைவனாக இருப்பவன்- நாராயணன்.
அவன் நாமத்தை இருதரம் சொன்னாலே போதும்-நம் பாபங்கள் அனைத்தும் தொலைந்து போகும்-வாருங்கள் அவன் நாமத்தை-நமோ நாராயணா என்ற நாமத்தை சொல்லுவோம்.

பெரிய திருமொழி
2. திண்மணிகள் பொன்னுடனே சேர்தலாலும்
சிதையாத நூல்வழியிற் சேர்த்தியாலும்
வண்மை எழும் ஈரிரண்டு வண்ணத்தாலும்
வானவருக்கும் வியப்பான வகுப்பினாலும்
உண்மையுடை வாசியொளி ஓசையாலும்
ஒரு காலும் அழியாத அழகினாலும்
மண்மகளாற்கு அலங்காரம் என்ன மன்னும்
மதிட்கச்சி நகர் கண்டு மகிழ்ந்திட்டானே //

தங்கத்தில் இரத்தினத்தை இழைத்து, அழியாத சிற்ப சாஸ்திரத்தின் முறையில் அமைக்கப்பெற்ற-நான்கு ஜாதியினரும் நிறைந்த, தேவர்களும் வியங்கும் அமைப்பயுடைய, இயற்கை அழகோடு கூடிய-ஒருபோதும் அழியாமல் நிலைபெற்ற அழகினால், பூமிக்கு ஆபரணம் என்னும்படி-மதிள்கள் சூழ்ந்த காஞ்சீபுரத்தை கண்டு பிரம்மனே மகிழ்ச்சி அடைந்தான்
ஸ்ரீ ஹஸ்தகிரி மஹாத்ம்யம்-பிரம்ம புராணம்

3. உய்த்துணர்வு என்னும் ஒளிகொள் விளக்கேற்றி
வைத்து அவனை நாடி வலைப்படுத்தேன்-மெத்தனவே
நின்றான், இருந்தான், கிடந்தான் என் நெஞ்சத்து
பொன்றாமை மாயன் புகுந்து //

மூன்றாம் திருவந்தாதி
அவனே எனக்கு கதி என்று ஒளிமயமான விளக்கை ஏற்றிவைத்து அவனை தேடிப்பிடித்து என் வசமாக்கி கொண்டேன். எளியவருக்கும் எளியனான எம்பெருமான் என் நெஞ்சிலே வந்து நின்று கொண்டான். சற்று நேரம் கழித்து மெதுவாக அமர்ந்து கொண்டான். வேறு வழி இல்லை என்று காலை நீட்டிக்கொண்டு படுத்துக்கொண்டு விட்டான். என்ன சுகம் எனக்கு-இது தெரியாமல் நான் இவனை நேற்றுவரை தடுத்து நிறுத்தியிருந்தேனே! என்று வருந்துகிறார் ஆழ்வார்-அவனுக்கே என்னிடம் எவ்வளவு கருணை என்று வியக்கிறார்.

3. அன்று நயந்த அயமேத மாவேள்வி
பொன்ற வுரையணங்கு பூம்புனலாய் கன்றிவர
ஆதி அயனுக்கருள் செய்தணையானான்
தாதை அரவணையான் தான் //

ப்ரம்மாவினால் விரும்பி சேய்யப்பட்ட அசுவமேதமென்னும் பெரிய யாகம் அழிந்துபோகும்படி வாக்கின் தேவதையான சரஸ்வதி அழகிய நதியாகி கோபித்துக்கொண்டு பெருகிவர உலகுக்கே தந்தையான-பாம்பணையில் பள்ளிகொண்ட எம்பெருமான் ப்ரஹ்மாவுக்கு அருள் செய்து தானை ஆற்றின் குறுக்கே அணையாகி ஸரஸ்வதியின் சீற்றத்தை தடுத்து யாகத்தை காப்பாற்றினான்-என்னே வரதனின் கருணை.
ஹஸ்தகிரி மகாத்மியம்


R.Jagannathan.

No comments:

Post a Comment