ஹஸ்தகிரியும், அருளாளனும்-5
1. கனையார் கடலும் கருவினையும் காயாவும்
அனையானை- அன்பினால் ஆர்வத்தால் என்னும்
சுனையார் மலரிட்டுத் தொண்டராய்நின்று
நினையாதார் நெஞ்சு என்றும் நெஞ்சல்ல; கண்டாமே //
பெரிய திருமொழி
ஒலிமிக்க கடலும், கருவினைப் பூவும் காயாம்பூவும் போல் நிறமுள்ளவன் எம்பெருமான். அவனிடத்தே அன்பும் ஆற்றாமையும் மிகுந்து, தடாகத்தில் பூத்த மலர்களை பறித்து அவன் பாதங்களில் சம்ர்ப்பிவித்து அவனுக்கு அடியார்களாகாவிட்டால் நாம் எடுத்த பிறவி வீணே. வாழ்த்தவாயும், நினைக்க மட நெஞ்சம், தாழ்த்த சென்னியும் தந்தவன் இறைவன், இவையெல்லாம் அவனை அநுபவிக்கவே வாய்த்தவை.
1. தரணியில் மன்னி அயனார் தனித்தவம் காத்தபிரான்
கருணையெனும் கடலாடித் திருவணையைக் கண்டதற்பின்
திரணர கெண்ணிய சித்ரகுபதன் தெரிந்துவைத்த
சுருணையிலேறிய சூழ்வினைமுற்றும் துறந்தனமே //
பூமியில் ஸ்திரமாயிருந்து ப்ரஹ்மாவினுடைய அஸ்வமேத யாகத்தை காப்பாற்றி பேருபகாரம் செய்த எம்பெருமானின் க்ருபை என்னும் கடலில் நீராடி, அணையை சேவித்தபிறகு சித்ரகுப்தனால் எழுதிவைக்கப்பெற்ற கணக்கில் வந்த பாபங்கள் எல்லாம் நீங்கப்பெற்றோம்.
ஹஸ்தகிரி மகாத்மியம்.
2.ஊனில் வாழ் உயிரே, நல்லைபோ உன்னைப் பெற்று
வானுளார் பெருமான், மதுசூதனன், என் அம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே //
என் உடமிபில் வாழ்கின்ற என் உள்ளமே- நீ நல்லவன் தான். உன் துணை கொண்டு நான் மிக பெரிய நன்மை அடைந்தேன். எப்பெருமான் மதுசூதனனும் நானும் என் நெஞ்சிலே ஒன்றாக கலந்துவிட்டோம். இந்த கலவையால் எல்லா சுவைகளும்- தேனும் பாலும், கருப்பஞ்சாரும் அமுதும் ஒன்றாக சேர்ந்தாற்ப்போல்.
திருவாய்மொழி
2. வாழி அருளாளர் வாழி அணி அத்தகிரி
வாழி எதிராஜன் வாசகத்தோர் வாழி
சரணாகதியென்னும் சார்வுடன் மற்றொன்றை
அரணாக கொள்ளாதாரன்பு //
பேரளுளார வாழ்க, பூமிக்கு அலங்காரமான ஹஸ்தகிரி வாழ்க, பாஷ்யகாரர் ஸ்ரீசூக்திகளில் ஈடுபட்டவர் வாழ்க, ப்ரப்த்தி என்னும் உபாயத்துடன் வேறு ஒன்றையும் உபாயமாக கொள்ளாதவர்களுடைய அன்பும் வாழ்க.
ஹஸ்தகிரி மஹாத்மியம்.
3. ஒத்தார் மிக்காரை இலையாய மாமாயா
ஒத்தாய் எப்பொருட்கும் உயிராய் என்னைப் பெற்ற
அத்தாய், தந்தையாய், அறியாதன அறிவித்த
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே
பகவானே உனக்கு இணையானவர் யாரும் இல்லை, உன்னைவிட உயர்ந்தவரும் யாரும் இல்லை. இப்படி ஆச்சர்யமான குணங்களையுடையவனே!- அந்த அந்த பொருட்களோடு ஒதத நிலைகளையுடையவனே, என்னுடைய உயிராகி, என்னைப்பெர்ற தாய் தந்தையுமாகி நான் அறியாதவையெல்லாம் அறிய செய்தாய். நீ தாயாய், தந்தையாய், ஆச்சார்யனாய் செய்த நன்மைகளை அடியேன் அறியேனே
திருவாய்மொழி
3. வம்மின் புலவீர் அருளாள பெருமான் என்றும்
அருளாழி அம்மான் என்றும்
திருமாமகளை பெற்றும் என் நெஞ்சம் கோயில்
கொண்ட பேரருளாளர் என்றும்
வியப்பா விருதூதும்படி கரைபுரண்ட கருணை கடலே
எவ்வண்ணம் பேசுவீர் ஈதென்ன பாங்கே//
புலவர்களை வாருங்கள், அருளாள பெருமான் என்றும், அருளாழி அம்மான் என்றும், பிராட்டியை தேவியாக கொண்டது மன்றி, என் மனதில் வசிக்கும் பேரளாளன் என்று ஆச்சர்யமாக பெருகும் கருணைக்கடலாக எம்பெருமானை எவ்வாறு நீங்கள் பேசவல்லீர்-இவ்வாறு செய்வது என்ன நேர்மை?
ஹஸ்தகிரி மஹாத்மியம்
R.Jagannathan.
No comments:
Post a Comment