தேரோடும் வீதி
சமீபத்தில் நான் ஸ்ரீரங்கம் சென்றிருந்தேன். 10-நாள் அரங்கனுக்கு பவித்ரோத்ஸவம் உத்ஸவம். ஆரம்ப நாளே பெருமாளுடைய புறப்பாடை சேவிக்க ஆவலுடன் திருமாமணி மண்டப வாயிலில் காத்துக்கொண்டிருந்தேன். அன்று சரியாக இரவு 7- மணிக்கு புறப்பாடு.
நம் பெருமாள் புறப்பாடு என்றாலே பார்க்க கண் கொள்ளா காட்சி. அது மாதிரி வேறு எந்த கோயிலிலும் காண முடியாது. ஜீயரும் மற்றும் வைணவ உபயதார்கள் மண்டபத்தின் வாயிலில் பெருமாளுக்காக காத்துக்கொண்டிருப்பார்கள். மணியதார் பெருமாளின் கட்டளையை ஏற்று தங்க கொடை சூழ ஸ்ரீமாந்தாங்கிகளை ( பெருமாளை ஏலபண்ணுபவர்கள் ) அழைத்துவரும் அழகே தனி. ஸ்ரீரங்கத்திற்கே உரித்தானது. நாதஸ்வரத்துடன் அவர்கள் மண்டபத்தின் வாயிலில் வரிசையாக நிற்பார்கள்.
அவர்கள் உடை அழகே தனி. எல்லொரும் ஒரே மாதி பஞ்சககச்சம் அணிந்து தலையில் ஆரஞ்சு சிவப்பு தலைப்பாகையுடன் பணிவன்புடன் பெருமாளின் உத்தரவுக்காக காத்திருப்பார்கள். உத்தரவு கிடைத்தவுடன் உள்ளே சென்று பெருமாளை ஏலப்பண்ணிகொண்டு கிளம்புவார்கள். பெருமாள் ராஜ நடையுடன் நுழை வாயிலை தாண்டும்போது-சாத்தாதர் கட்டியம் கூறுவார். சிம்மம் போல் நடந்து வந்து சற்று வினாடி கருடனை பார்த்துவிட்டு கம்பீரமாக திரும்பி மேற்கு வாயிலின் அருகே நிற்பார்.
அவர் வெளியே வரும் சமயம் ஜீயரும் மற்றவர்களும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு தீர்த்தம், சடாரி பெற்றுக்கொண்டு விடை பெறுவார்கள். பெருமாள் படியைவிட்டு இரங்கி சற்று நேரம் எதிரே உள்ள கண்ணாடி அரை முன் நின்று விட்டி பவித்ரோத்ஸவ மண்டபத்தை நோக்கி புறப்படுவார்.
ஒரே ஓட்டம் தான்-பெருமாள் 10-நிமிடத்தில் துவஜஸ்தம்பத்தை தாண்டி பவித்ரோத்ஸவ மண்டபத்தை அடைவார். அங்கே திருவந்திகாப்பு கண்டருளி மண்டபத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்காக காட்சி கொடுப்பார். இது 10- நாளிலும் நடைபெறும்.
பவித்ரோத்ஸவம் எதற்காக நடைபெறுகிறது?
பெருமாளுக்கு தினமும் திருமஞ்சனம், ஆராதனமும், அமுதுபடியும் ஆகம முறைப்படி நடைபெறவேண்டும். சுழல் முறையில் பட்டர்கள் இதை மேற்கொள்வார்கள். இதில் தெரிந்தோ, தெரியாமலோ தவறுகள் ஏற்படலாம். அதே போல அலங்காரத்திலும், ஆடைகளிலும் குறைபாடுகள் ஏற்படலாம். அதற்கு பரிகாரம் தான் இந்த பவித்ரோத்ஸவம்.
பவித்ரமான புணூலை அணிவித்து ஹோமம் முதலான விதிகளை இந்த 10-நாட்களிலும் அனுசந்தித்து வெகு ஜாக்கிரதையாக பவித்ரோத்ஸவ மண்டபத்தில் பெருமாளை தினம் எழுந்தருளப்பண்ணி பக்தர்களுக்கு அநுக்ரஹம் செய்ய இந்த விழா. இது முடிந்தவுடன் பவித்ரங்களை கலைந்துவிட்டு பழைய படி தினம் பூஜாகாலம் தொடரும்.
இந்த 10-நாளில் ஒரு நாள் நான் தேரோடும் சித்திரை தெருவில் வீதி ப்ரதக்ஷிணம் செய்ய சென்றேன். முக்கியமாக பலவருஷங்களுக்கு பிறகு இந்த வீதிகள் எப்படி மாறி இருக்கின்றன, பழைய சம்பிரதாயம் தொடருகிறதா என்று அறிய ஆவல்.
எனக்கு நான் சற்றும் எதிபாராத அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. பழைய வீதிகள் முழுவதும் மாறிவிட்டது. ஸ்ரீரங்கம் தன் புராதண சரித்திரத்தை இழந்துகொண்டிருப்பது கண்கூடாக காண முடிகிறது.
அந்தகாலத்தில் வீடுகள் வாசலில் திண்ணையுடன் அழகாக இருக்கும். முக்கியமாக யாத்ரீகர்கள் ஒரு நாள் அல்லது 2- நாட்கள் தங்க இந்த திண்ணைகள் பயன்பட்டு வந்தன. வெய்யல் காலங்களில் வீட்டு சொந்தக்காரர்கள் வெளியில் படுத்து உறங்கவும், பயணிகள் சற்று இளைப்பாரவும் பயன்பட்டுவந்தன.
அநேகமாக இந்த வீடுகள் 10-15 அடி அகலம், 100 அடி நீளமாக இருந்தன. ஒரே ஒரு அறை தான் வாசலை நோக்கி இருக்கும். புதிதாக கல்யாணமான சிறுசுகளைத்தான் இங்கு படுக்க சொல்வார்கள். மற்றபடி எல்லோரும் சேர்ந்தே வாழ்வார்கள். ( JOINT FAMILY ). துன்பத்திலும் இன்பத்திலும் சம பங்கு. கல்யாணம் என்று வந்தால் கோலாகலம் தான். அதுமாதிரி வீதியில் பெருமாள் ஏளினால் கல்யாண களைதான். விதம் விதமான கோலங்கள்-போட்டி போட்டுக்கொண்டு இளம் பெண்கள் அழகாக பாவாடை தாவனியுடன் கோலம் போடுவார்கள்.
வருஷம் 300 நாளும் பண்டிகை நாள் தான் ஸ்ரீரங்கத்தில்-ரங்கன் வீதியில் வலம் வரும் காட்சியே தனி காட்சி தான்.யானையும், குதிரையும் முன்னே செல்ல நாதஸ்வரம் வாசிக்க நம் பெருமாள் தேரோடும் சித்திரை, உத்திர வீதிகளில் பவனி வரும் காட்சியை காண ஆயிரம் கண்கள் வேண்டும். பெருமாளுக்கு இன்றும் எண்ணை விளக்கு தான்-கேஸ் லைட் கிடையாது.
நடந்து கொண்டே வலம் வரும்போது மேற்படி காட்சிகள் என் மனதில் அலையோடின. ஆனால் இன்று வீதிகள் முழுக்க மாறிவிட்டது. பழைய வீடுகளை இடித்து புதிதாக வீடுகள். திண்ணை எல்லாம் போய்விட்டது. அதற்கு பதிலாக கேட் போட்ட காம்பவுண்ட்-வாகனங்கள் நிறுத்த. பெருமாள் வரும் சமயம் அவசர அவசரமாக ஒரு சிறு கோலம். இளம் பெண்களை காணவில்லை.சூரிதாரும்,சால்வார் கமீஸும் தான்.
அந்த நாளில் வீசிய தெய்வீக மணம் குறைந்துவிட்டது. இருந்தாலும் பலர் பழைய சம்பிரதாயங்களை கட்டி காக்க போராடுகிறார்கள். அரங்கனுக்கு நடக்கும் திருவிழா தொடர்ந்து பழைய பாணியிலேயே நடந்து கொண்டிருப்பது ஒரு மகிழ்ச்சியான விஷயம். புதுமை வேண்டும் . ஆனால் அது பழமையின் மேன்மையை தழுவி அமையவேண்டும்.
10-நாள் உத்ஸவத்தை கண்குளிர கண்டு அரங்கனோடு இணைந்துவிட்டு பிரிய மனமில்லாமல் எங்கள் வாழ்க்கை பயணம் தொடர்கின்றது. மீண்டும் அரங்கனை காண எப்போது? தெரியவில்லை.
-------------------------------------
No comments:
Post a Comment