Wednesday, May 18, 2011

அத்தகிரியும், அருளாளனும்- 10

அத்தகிரியும், அருளாளனும்- 10


1. நாவாயில் உண்டே; ' நமோ நாரணா ' என்று
ஓவா துரைக்கும் உடையுண்டே; மூவாத
மாக்கதிக்கண் செல்லும் வகையுண்டே; என் ஒருவர்
தீக்கதிக்கண் செல்லும் திறம் ?

பகவானை துதிப்பதற்கான நாக்கு நம் வாயிலேயே இருக்கிறது. களைப்பே இல்லாமல் ஆயிரம் தடவை ' நமோ நாராயணா ' என்று சொல்ல. அவன் திருவடியை அடைய- ப்ரப்த்தி, பக்தி என்று பல எளிய வழிகள் இருக்கின்றன. இவைகளை எல்லாம் விட்டு விட்டு சிற்றின்பம் மற்றும் பல தீய வழிகளில் விழ சிலருக்கு எப்படித்தான் ஏற்படுகின்றதோ? என்ன விந்தை இது.

முதல் திருவந்தாதி.

1. பாலாக்ருதேர் வட பலாச மிதஸ்ய யஸ்ய
ப்ரஹ்மாண்ட மண்டல மபூ துதரைக தேசே
தஸ்யைவ தத் வரத ஹந்த கதம் ப்ரபூதம்
வாராஹ மாஸ்த்திதவதோ வபு ரத்புதம் தே //

அருளாள பெருமானே! நீ சிறு குழந்தையாக ஆலிலை மேல் சயனித்து உன் வயிற்றில் சிறு பகுதியில் ப்ரமாண்டம் அனைத்தையும் அடக்கிக்கொண்டாய். இது ஒரு பெரிய அற்புதம். நீ வராஹ அவதாரம் எடுத்த போது அந்த திருமேனி ப்ரஹ்மாண்டத்தில் அடங்கி இருந்தது. இது எப்படி சாத்தியமாயிற்று? இது உன்னால் மட்டும் தான் முடியும். உன்னுடைய அற்புத திருவிளையாடல்களை என்னவென்று வர்ணிப்பது?

ஸ்வாமி தேசிகன்- வரதராஜ பஞ்சாசத்.

2. கான எண்கும் குரங்கும் முகவும்
படையா அடல் அரக்கர்
மானம் அழித்து நின்ற வென்றி
அம்மான் எனக்கு என்றும்
தேனும் பாலும் அமுதுமாய
திருமால் திருநாமம்
நானும் சொன்னேன்; நமரும் உரைமின்
நமோ நாராயணமே //

காட்டு கரடிகளையும், குரங்குகளையும் படைத்துணையாக்கி ராவணனையும், அரக்கர்களையும் வென்றான் என் திருமால். பிறரையேசொல்லிக்கொண்டிருந்த நானும் அவன் பெயரை சொன்னேன். அந்த நாமம் எனக்கு தேன் போலும், பாலும் அமுதும் போல் இருக்கிறது. ஆகையால் நம்மவர்களே வாருங்கள் அவன் நாமத்தை சொல்லுங்கள்.

பெரிய திருமொழி

2. ஸ த்வம் ஸ ஏவ ரபஸோ பவதௌபவாஹ்ய:
சக்ரம் ததேவ சித தார மஹம் ச பால்ய:
ஸாதரணே த்வயி கரீச ஸமஸ்த ஜந்தோ:
மாதங்க மாநுஷ பிதா ந விசேஷ ஹேது: //

அத்தகிரி அருளாளனே! அன்று கஜேந்திரனை காக்க கருடன் மேல் பறந்து வந்தாய். உன் கூரிய சக்ராயுதத்தால் முதலையின் வாயை பிளந்தாய். அதே பெருமாள் இன்று அருளாளனாக என் முன் நிற்கின்றாய். ஏன் இன்னும் என் சம்சார பந்தத்தில் உழலும் என்னை காக்க வரவில்லை. ஒரு வேளை அது யானை, நான் மனுஷன் என்று பார்கிறாயோ! உனக்கு அந்த பேதமே கிடையாதே. யானையை காத்த வரதனே என்னையும் காத்து அருளவேண்டும் //

ஸ்வாமி தேசிகன்- வரதராஜ பஞ்சாசத் //

3.கண்ணன் கழல் இணை
நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரயணமே//

நமக்கு நாரணன் என்ற திருநாமமே திருமந்திரம். ஓம் என்ற பிரணவமும் வேண்டாம் நம என்ற சப்தமும் வேண்டாம், நாராயணாய என்ற பெயரும் வேண்டாம் . வெறும் நாரணன் என்றாலே போதும்- சத்தியமாக சொல்லுகிறேன்- அவன் ஓடி வருவான் நம்மை ரக்ஷிப்பான் என்கிறார் ஆழ்வார். வேதத்தை காட்டிலும் மேலான பிரமாணம் கிடையாது கேசவனைக்காட்டிலும் வேறு தெய்வம் கிடையாது என்று வியாசர் கூறியதை போல ஆழ்வாரும் திண்ணமாக கூறுகிறார்.

3.இதி விஹிதமுதாரம் வேங்கடேசேந பக்த்யா
ச்ருதி ஸுபகமிதம் ய: ஸ்தோத்ர மங்கீகரோதி
கரிசிகரி விடங்க ஸ்த்தாயிந: கல்ப வ்ருக்ஷாத்
பவதி பலமசேஷம் தஸ்ய ஹஸ்தாபசேயம் //

இவ்வாறு வேங்கடேசனால் பக்தியோடு இயற்றப்பட்டதாய் கருத்துக்கள் நிறைந்ததாய் செவிக்கும் இனியதான இந்த ஸ்தோத்திரத்தை எவன் ஏற்று பயிகின்றானோ அவனுக்கு அத்தகிரியான மாளிகையில் புறாக்கூண்டு போல மேல்பாகத்தில் நிற்கின்ற கற்பக மரத்திலிருந்து எல்லா பலனும் கையால் பறிக்க ஏற்றதாய் ஆகின்றது.

ஸ்வாமி தேசிகன்- வரதராஜ பஞ்சாசத்.

அடியேனுக்கு வெகு நாளாக ஒரு ஆசை. நம் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் பகவானை எப்படி அநுபவித்துள்ளார்கள் என்று நானும் அநுபவித்து அன்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக வேகா சேது என்ற அடியேனுடைய பிளாக்கில்- ஓ! ரங்கசாயி என்ற பிரிவில் எழுதி வந்து இன்று காஞ்சி வரதனின் கருட சேவையோடு நிறைவு பெறுகிறது.

அரங்கன்- வேங்கடவன்- அருளாளன் ; அரங்கம்- வேங்கடமலை - அத்தகிரி - வைணவர்களின் ஸ்வர்க்கம்- அமுதமான தித்திக்கும் நாதமாம் நாரணனின் நாமம். இவைகளை 10-10 பாசுரங்களாக அர்த்தத்தோடு விளக்கி வந்தோம் -ஆழ்வார்களின், ஆச்சார்யர்களின் பாசுரம் மூலமாக.

அதே மாதிரி அரங்கன் - திருவிழா, வேங்கடவன் ப்ரஹ்மோத்ஸவம், அருளாளனின் ப்ரஹ்மோத்ஸவம் இவைகளை பவர் பாயிண்ட் ஸ்லைட் ஷேர் மூலமாக அன்பர்களுக்கு அளித்துள்ளோம்- நூற்றுக்கணக்கான அன்பர்கள் இவைகளை கண்டு களித்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார்கள். அவர்களுக்கெல்லாம் என் மனமார்ந்த வணக்கமும் மரியாதையும்.

எங்கெல்லாம் அலைந்து சம்சாரகடலில் சுற்றிக்கொண்டிருந்த அடியேனை அரங்கன் 1994 ல் திருவரங்கத்திற்கு அழைத்தான். தினமும் அவனை காண வசதி செய்து கொடுத்தான்.அவன் கிருபையால் ஆன்மீகத்தில் ஈடுபடுத்தி பல கட்டுரைகளை எழுதவைத்தான்.பிளாக் மூலமாக பல அரிய ஸ்தோத்திரங்களை போடவைத்தான்.

அவனின் அருளை வார்த்தைகளால் சொல்லவோ, எழுதவோ முடியாது.இதை படிக்கும் அன்பர்களுக்கு அரங்கன்- வேங்கடவன்- அருளாளன் அருள் பரிபூர்ணமாக கிடைக்க அடியேன்
ப்ரார்த்திக்கிறேன்.

தாஸன் ஜெகன்னாதன்.

No comments:

Post a Comment