Wednesday, May 18, 2011

அத்தகிரியும், அருளாளனும்-7

அத்தகிரியும், அருளாளனும்-7

1. நாவாயில் உண்டே; 'நமோ நாராயணா ' என்று
ஓவா துரைக்கும் உரையுண்டே; - மூவாத
மாக்கதிக்கண் செல்லும் வகையுண்டே; என் ஒருவர்
தீக்கதிக்கண் செல்லும் திறம்?

எம்பெருமானை துதிப்பதற்கு நாக்கு எங்கும் தேடாமல் நம் வாயிலேயே இருக்கிறது. திருப்பி திருப்பி களைப்பில்லாமல் சொல்ல நமோ நாராயணா என்ற திருமந்திரம் நம்மை பரம பதத்திற்கு இட்டு செல்ல பக்தி, ப்ரபத்தி போன்ற எளிய வழிகள் இருக்கின்றன. இவையெல்லாம் விட்டு விட்டு சிலருக்கு தீய வழிகளில் செல்ல எப்படி நாட்டம் ஏற்படுகிறதோ ? என்ன விந்தை இது.

முதல் திருவந்தாதி.

1. பெருமையுடை அத்தகிரி பெருமாள் வந்தார்
பேராது அருள்பொழியும் பெருமாள் வந்தார்
அருமறையின் உச்சிதனில் நின்றார் வந்தார்
அங்கமுடன் அவையாகும் பெரியோர் வந்தார்

பெருமையுடைய அத்தகிரி பெருமாள் எழுந்தருளினார். நீங்காத கருணயுடைய பெருமாள் வந்தார். வேதத்தின் சிகரத்தில் போற்றப்பட்டு நின்றார். சங்கு, சக்கர கதாபாணியாய் வேதஸ்வரூபியான பெருமாள் வந்தார். பிராட்டி ஸப்தஸ்வரூபமாய் நிற்க தாம் அர்த்த ஸ்வரூபியாக நிற்பார்.

ஹஸ்தகிரி மஹாத்மியம்.

2. கண்டு கொண்டு என் கண்- இணை ஆரக்களித்து
பண்டைவினையாய்டின பற்றோடு அறுத்து
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல்-மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே //

வைகுண்டத்தில் காணும் பெருமாளை வரதனாய் காண பாக்கியம் பெற்றேன் அவரை பார்த்து மகிழும் பேறு பெற்றேன். அதனால் என் வினைகள்-முந்தியன-நல்லவை, தீயவை அனைத்தையும் போக்கிக்கொண்டேன். இனி அவனை அடைய தடுப்பவர் யாரும் இல்லை. இது என்னோடு இல்லாமல் திருமால் அடியவர்களுக்கு உபகாரம் செய்ய தித்திக்கும் அமுதமாக திருவாய் மொழியை என் பெருமாள் என் மூலமாக பாட செய்தான். என்னே என் பேறு.


2.. திருவுரையாய்த் தாம் பொருளாய் நிற்பார் வந்தார்
திருவருளால் செழுங்கலைகள் தந்தார் வந்தார்
மருவிலர்க்கு மயக்குரைக்கும் மாயோன் வந்தார்
வானேற வழி தந்தார் வந்தார் தாமே //

திருமந்திரத்திற்கு பொருளாய்- அதாவது பேரழகை பொழிகின்றவராய், ஆனந்தத்திற்கு வசப்பட்டு நிற்பவர் வந்தார், நமக்கு உயர்ந்த சாஸ்திரங்களை தந்தவர் வந்தார், நாஸ்திகர்களுக்கு மேலும் மேலும் மோஹன சாஸ்திரங்களை வெளியிடுகின்ற வஞ்சகர் வந்தார்.பரம பதத்திற்கு ஃஷெல்ல உபாயத்தை உபதேசித்தவர் வந்தார்.

3. கரிய மேனி வெளியநீறு இடும்
பெரிய கோலத் தடங்கண்ணன், விண்னோர் பெருமான் தன்னை
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏந்தி உள்ளப் பெற்றேற்கு
அரியது உண்டோ- எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே ?

அருளாளன் செம்பொன் நிறத்தவன்- கரிய திருமேனி. அந்த திருமேனியில் கருவிழியின் அழகுக்கு மேலே அஞ்சனப்பொட்டு. அழகிய விசாலமான கண்கள். நித்யசூரிகளுக்கு தலைவன். அந்த தலைவனை இசைமாலையாம் திருவாய் மொழி என்ற மாலைகளால் துதிக்கப்பெற்றேன். இதைவிட பாக்கிய சாலி யார் இருப்பார். உனக்கு அடிமை செய்தே இனி காலமெல்லாம் கழிப்பேன்.

திருவாய்மொழி.

3. அத்தகிரி அருளாள பெருமாள் வந்தார்
ஆனை, பரி தேரின் மேல் அழகர் வந்தார்
கச்சிதனில் கண்கொடுக்கும் பெருமாள் வந்தார்
கருதவரம் தரும் தெய்வ பெருமாள் வந்தார்
முத்தி மழை பொழியும் முகில் வண்ணர் பெருமாள் வந்தார்
மூலமென ஓலமிட வல்லார் வந்தார்
உத்திர வேதிக்குள்ளே உதித்தார் வந்தார்
உம்பர் தொழும் கழலுடையார் வந்தார் தாமே.

ஹஸ்தகிரியில் எழுந்தருளியிருக்கும் பேரருளாள பெருமாள் , யானை, குதிரை, தேர் ஆகிய வாஹனங்களில் கண்ணை மயக்கும் வண்ணம் வந்தார்.மனதால் நினைத்த மாத்திரமே வேண்டிய வரத்தை அருளும் பெருமாள் வந்தார். தேவர்களுக்கும் பக்தர்களுக்கும் மோக்ஷத்தையளிக்கும் பெருமாள் வந்தார். யானைக்கு அருளிய பெருமாள் வந்தார்.உத்திர வேதிக்குள்ளே ஆவிர்பவிப்பவர் , நித்ய சூரிகளால் தொழப்படுபவர், பக்தர்களுக்கு திருவடியை காண்பித்து அடைக்கலம் அருளும் பெருமாள் வந்தார்.

ஹஸ்தகிரி மஹாத்மியம்.

R.Jagannathan.

No comments:

Post a Comment