Wednesday, May 18, 2011

அத்தகிரியும், அருளாளனும்- 9

அத்தகிரியும், அருளாளனும்- 9

1. பெற்றார் பெற்று ஒழிந்தார்; பின்னும் நின்று அடியேனுக்கு
உற்றானாய், வளர்ந்து என் உயிராகி நின்றானை
முற்றா மாமதி கோல் விடுத்தானை, எம்மானை
எத்தால் யான் மறக்கேன்? இது சொல் என் ஏழைநெஞ்சே //

பெற்ற தாய் தந்தையர் என்னை விட்டு போய்விட்டார்கள். இந்நிலையில் அடியவனுக்கு நீ தாயாக, தந்தையாக நின்று உய்வித்தாய். அதோடு நில்லாமல் எனக்கு உயிராகவும் நிற்கின்றாய். எல்லோர் நோயையும் போக்குபவன். அப்படிப்பட்ட எம்பெருமானை நான் எப்படி மறக்க முடியும். மூட நெஞ்சமே இதை சொல்லுவாயாக.

பெரிய திருமொழி.

1. வாழி அருளாளர் வாழி அணி அத்தகிரி
வாழி எதிராசன் வாசகத்தோர் வாழி
சரணாகதியென்னும் சார்வுடன் மற்றொன்றை
அரணாகக் கொள்ளாதார் அன்பு //

பேரருளாளர் வாழ்க, அலங்காரமான அத்தகிரி வாழ்க, பாஷ்யகாரர் ஸ்ரீ ஸூக்திகளில் ஈடுபட்டவர் வாழ்க, ப்ரப்த்தி என்னும் உபாயத்துடன் வேறு ஒன்றையும் உபாயமாக கொள்ளாதார் அன்பு வாழ்க.

ஹஸ்தகிரி மஹாத்மியம்.

2. காசும் கரையுடைக் கூறைக்கும் அங்கு ஓர் கற்றைக்கும்
ஆசையினால், அங்கு அவத்தப் பேரிடும் ஆதர்காள்
கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்து இருமினோ
நாயகன் நாரணந்தம் அன்னை நரகம் புகாள் //

நாலிரண்டு காசுக்கும், கட்டு நெற்கதிருக்கும், கறையுடைய ஆடைக்கும் ஆசைப்பட்டு கீழ் தேவதைகளின் பெயரிட்டு வீணே கழிக்கிறீர்கள். அடியார்களின் துன்பத்தைப்போக்கும் மேலான தெய்வமாம் எங்கள் நாரணன். அவன் பெயரிட்டு மேலான செல்வமாம் வைகுண்டத்துக்கு செல்ல வழி வகுத்துக்கொள்ளுங்கள். அவன் நாமம் இட்ட பிள்ளையின் தாய் ஒரு போதும் நரகத்திற்கு போகமாட்டாள்.

பெரியாழ்வார் திருமொழி

2. வம்மின் புலவீர் அருளாளபெருமாள் என்றும்
அருளாழி அம்மான் என்றும்
திருமாமகளைப் பெற்றும் என் நெஞ்சம் கோயில்
கொண்ட பேரருளாளர் என்றும்
வியப்பா விருதூதும்படி கரைபுரண்ட கருணைக் கடலே
எவ்வண்ணம் பேசுவீர் ஈதென்ன பாங்கே //

புலவர்களே வாருங்கள்! அரூளாள பெருமான், அருளாழி அம்மான், பிராட்டியை தேவியாக கொண்டு சதா தன் மார்பில் தரித்துக்கோண்டிருப்பவனும், கருணைக்கடல், வள்ளல் சதா என் மனதில் குடிகொண்டு நித்ய வாசம் செய்யும் பேரருளாளர் என் அத்தகிரி பெருமானை பற்றி பேச யாருக்கும் நேர்மை கிடையாது- அதாவது அவன் கருணை எல்லையை கடந்தது.

ஹஸ்தகிரி மஹாத்மியம். //

3. ஈனமாய எட்டும் நீக்கி ஏதம் இன்றி மீதுபோய்
வானம் ஆளவல்லையேல் வணங்கி வாழ்த்து, என் நெஞ்சமே!
ஞானம் ஆகி, ஞாயிறு ஆகி ஞாலமுற்றும் ஓர் எயிற்று
ஏனமாய் இடந்த மூர்த்தி எந்தைபாதம் எண்ணியே //

என் நெஞ்சமே! ஆத்மாவுக்கு கெடுதல் கொடுக்கும் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யாம், அஞ்ஞானம், அசூயை ஆகிய எட்டையும் போக்கி , சம்சார துக்கமெல்லாம் நீங்கி பரம பதம் அடைய பகவானின் திருவடியை பற்று. அவனே ஆத்ம சுகத்தை அளிப்பவன்.சூரியனை போல அறிவு சுடரை ஏற்றுபவன்.

திருச்சந்தவிருத்தம்.

3. வரத தவ விலோகயந்தி தந்யா:
மரகத பூதர மாத்ருகாயமாணம்
வ்யபகத பரிகர்ம வாரவாணம்
ம்ருகமத: பங்க விசேஷ நீலமங்கம் //

வரம் தரும் வரதனே! திருவாபரணங்கள், கவசம் இவற்றை கழற்றிய நிலையிலும், மரகத மலைக்கு ஒப்பாக மூலவடிவம் போன்றதாய் கஸ்தூரி குழம்பினால் மிக நீல நுஇறம் உள்ளதான உனது திருமேனியை காண்பவர்கள் பெரும் பாக்கிய சாலிகள்.

ஸ்வாமி தேசிகன்- ஸ்ரீ வரதராஜ பஞ்சாசத்.

R.Jagannathan

No comments:

Post a Comment