Saturday, December 25, 2010

திருவேங்கடமும், வேங்கநாதனும்-7

திருவேங்கடமும், வேங்கநாதனும்-7

1. அகலகில்லேன் இறையும் என்று
அலர்மேல் மங்கை உறைமார்பா!
நிகர் இல் புகழாய்! உலகம் மூன்று
உடையாய் என்னை ஆள்வானே
நிகரில் அமரர் முனிக்கணங்கள்
விரும்பும் திருவேங்கடத்தானே
புகழ் ஒன்று இல்லா அடியேன் உன்
அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே !

சதா திருமகள் நித்யவாசம் செய்யும் திருமார்பை உடையவனே! மூவுலகங்ககளையும் படைத்து காக்கும் பரந்தாமனே! என்னை ஆள்கின்றவனே! நித்ய சூரிகளும், முனிவர்களும் விரும்பும் திருவேங்கடத்தில் வாசம் செய்கின்றவனே! உன்னையன்றி எனக்கு வேறு கதியில்லை, நான் உனக்கே தொண்டு செய்பவன் உன் திருவடியில் சரணம் புகுந்தேன். நீ எனக்கு அடைக்கலம் தந்து என்னை காக்க வேண்டும்.
நம்மாழ்வார்- திருவாழ்மொழி.

1. ஜகத் ஜந்ம ஸ்த்தேம ப்ரளய ரசநா கேளி ரஸிக:
விமுக்த்யேக த்வாரம் விகடித கவாடம் ப்ரணயிநாம் /
இதி த்வய்யாயத்தம் த்விதய முபதி க்ரித்ய கருணே
விசுத்தாநாம் வாசாம் வ்ருஷ சிகரி நாத: ஸ்துதி பதம் //

தயாதேவியே! திருவேங்கடநாதன் உலகில் பல லீலைகளை புரிகிறான் அதில் ஒன்று பிறப்பு, இறப்பு மற்றும் வைகுண்ட வாசலை எப்போதும் உன் பக்தர்களுக்காக திறந்து வைத்திருக்கும் உன் நாதன்-இவை எல்லாவற்றையும் உன் காரணமாகவே கொண்டு செய்கின்றான். அதனால் பரிசுத்தமான வேத வாக்குகளுக்கு துதிக்க ஏற்றவனாய் இருக்கின்றான்.

ஸ்வாமி தேசிகன்- தயா சதகம்.

2. கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார், சுற்றத்தவர் பிறரும்
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை
எண்திசையும் கீழும் மேலும் முற்றவும் உண்டபிரான்
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே//

மணம் செய்து கொண்ட பெண்டிர்களும், மக்களும் மற்றும் உறவினர்கள், தாயாதியர், நண்பர்கள் ஆகிய அனைவரும் அன்புள்ளவர்களாய் காணப்படுவர் கையில் பொருள் இருந்தால். அது இல்லாத போது அன்பு போய்விடும். ஆனால் திருவேங்கடத்தானோ-ப்ரளய காலத்தில் உலகை உண்டு காப்பாற்றியவன்-அவனுக்கு அடியராகி உய்வு பெறுவோம் அவனையன்றி நமக்கு துணை வேறு யாரும் இல்லை.
நம்மாழ்வார்- திருவாய்மொழி.

2. தாழ் சடையும் நீள் முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழ் அரவும் பொன்நாணும் தோன்றுமால்-சூழும்
திரண்டு அருவிபாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து //

ஒரு பக்கம் தாழ்ந்த சடை, மறுபுரம் நீண்ட திருவடி, ஒரு பக்கம் அழகிய மரு, மறுபக்கம் சக்கரப்படை. சுற்றிய நாகம் ஒருபுறம், பொன் அறைநாண் மறு புரம், இப்படி ஒன்றுக்கொன்று சேராத சர்த்தியாக இருக்கிற இரண்டு வடிவம்-நாற்புரமும் அருவிகள் சூழ்ந்த திருமலையில் ஒரே வடிவமாக காண்பது என்ன அதிசயம்.

மூன்றாம் திருவந்தாதி.

3. குலந்தான் எத்தனையும் பிறந்தேயிறந் தெய்த்தொழிந்தேன்
நலந்தான் ஒன்றுமிலேன்; நல்லதோரறஞ்செய்துமிலேன்
நிலந்தோய் நீள்முகில்சேர் நெறியார் திரு வேங்கடவா!
அலந்தேன் வந்தடைந்தேன்; அடியேனையாட் கொண்டருளே//

திருமங்கை ஆழ்வார் பகவானை பார்த்து கதறுகிறார். பல பிறவிகள் எடுத்துவிட்டேன் ஆனால் யாருக்கும் நலம் ஒன்றும் செய்யவில்லை, நல்ல அறமும் செய்யவில்லை. பிறந்து, பிறந்து ஒழிந்தேன். அலைந்தேன் அலைந்து - கோலைகள் அருவிகள் சூந்த திருவேங்கட மலையில் வாழும் திருவேங்கட நாதா!உன் அடிக்கீழ் புகுந்துவிட்டேன். என்னை ஆட்கொள்.

திருமங்கை ஆழ்வார்- பெரிய திருமொழி.

3. ம்ருது ஹ்ருதயே தயே ம்ருதித காம ஹிதே மஹிதே
த்ருத விபுதே புதேஷு விததாத்மா துர மதுரே /
வ்ருஷகிரி ஸார்வபௌம தயிதே மயி தே மஹதீம்
பவுக நிதே நிதேஹி பவமூல ஹராம் லஹரீம் //


மென்மையான உள்ளம் கொண்ட தயாதேவியே! எங்களை காப்பவளே! ஆசையை வென்றவர்களுக்கு எப்போதும் நன்மை செய்பவளே! உன் அடியார்களிடம் தன் பொறுப்பை கொடுத்தவளாய், திருவேங்கடவன் மார்பில் எப்போதும் உறைபவளாய் அவனை அண்டியவர்களுக்கு உன் மங்களை அளிப்பவளாய், இனியவளாக எல்லோரும் போற்றுபவளான தயா தேவியே! ஸம்ஸார கடலிலிருந்து என்னை மீட்க உன் அலையை என்மீது வீசுவாயாக.

ஸ்வாமி தேசிகன்- தயா சதகம்.

சேதநர்கள்:

திருவேங்கடநாதன் சதா தன் பக்தர்கள் தன்னிடம் வர மாட்டார்களா என்று ஆவலோடு திருமலையில் காத்துக்கொண்டிருக்கின்றான். பக்தர்களோ என்று அவனை காண்போம், தங்களுடைய கவலைகளை எல்லாம் அவன் கண்டிப்பாக தீர்த்துவைப்பான் என்ற திட விச்வாஸத்தோடு அவனை சரண் அடைகிறார்கள். பக்தர்களுக்கும் அவனுக்கும் எத்துணை அந்யோந்யம், ஒற்றுமை.

R.Jagannathan.

No comments:

Post a Comment