திருப்பாணாழ்வார் பகவானுக்கு திருமஞ்சனத்திற்கும், தளிகைக்கும் பானை செய்து தரும் குழவன் ஜாதியை சேர்ந்தவர். ஆனால் அவர் நினைவெல்லாம் அரங்கனே! அவர் அருளிசெய்த பாசுரம்-அமலனாதிபிரான்.
அமலன் ஆதிபிரான் அடியார்க்கு
என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர்கோன்
விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதிவானவன்
நீள்மதிள் அரங்கத் துஅம்மான் திருக்
கமலபாதம் வந்து என் கண்ணின்
உள்ளன ஒக்கின்றதே!
ஒரு குறையும் இல்லாத கோவிந்தன், உலக தோற்றத்திற்கு காரணம் ஆனவன், உபகாரகன், சிறிமை பாராது அடியார்களுக்கு அருள் பாலிப்பவன், வைகுண்ட வாசிகளுக்கு தலைவன், மணம் மிக்க சோலைகள் அடங்கிய திருவேங்கடமலையிலிருந்து அரங்கத்திற்கு வந்தவன், அடியார்களிடம் குறை காணாதவன், நீதியை காப்பவன், அரங்கத்தில் யோக நித்திரை செய்பவன்-அவனுடைய அழகிய திருவடி தாமரை என் கண்ணில் புகுந்து எங்கும் அலைய விடாது பிரகாசிக்கின்றது.
ஆலமா மரத்தின் இலைமேல்
ஒருபா லகனாய்
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து
அரவின் அணையான்
கோலமா மணிஆரமும் முத்துத்
தாமமும் முடிவுஇல்லது ஓர் எழில்
நீலமேனி ஐயோ! நிறை
கொண்டது என் நெஞ்சினையே!
பெரியதான ஆலமரத்தின் ஒரு சிறிய இலைமேல் சிறிய பிள்ளையாகி ஏழு உலங்களையும் தன்னுள்ளே அடக்கிக்கொண்டவன், திருவரங்கத்திலே திருவனந்தாழ்வான் மீது பள்ளி கொண்டு கண் வளர்பவன்-அழகிய ரத்தினகற்களால் செய்யப்பட்ட மாலைகளை தரித்திருப்பவன், முத்து வடங்களை அணிந்திருப்பவன் அவைகளுக்கு சோபை தரும் நீல திருமேனியை உடையவன்-அவன் என் நெஞ்சத்தில் புகுந்து கொள்ளை கொண்டு போயிற்றே! ஐயோ ! இதற்கு நான் என்ன செய்வேன்.
கொண்டல் வண்ணனை கோவலனாய் வெண்ணைய்
உண்டவாயன் என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்றுஒன்றினை காணாவே //
அமலனாதிபிரான்.
நெடுங்காலம் காவேரி கறையில் மனத்தால் மட்டும் அரங்கனை-அனுபவித்த பானருக்கு திருமாமணிமண்டபத்துக்குள்ளேயே இரு தூண் அருகில் இருந்து அனுபவிக்கும் போது பிறந்த பாசுரம் இது.
அன்று ஆயர்பாடியில் இடை பிள்ளையாக வெண்ணை உண்ட திருவாயை இங்கு காண்கிறேன் அவ்வெண்ணை போல என் நெஞ்சம் முழுதும் நிறைந்திருப்பவனே! அரங்கத்திற்கே ஆபரணமாக யோக நித்திரை செய்பவனை-எனக்கு அமுதமாக தித்திக்கும் அழகிய மணவாளனை கண்ட என் கண்கள் வேறொன்றும் காணமாட்டா.
பூண்முலைமேல் சாந்து அணியாள்; பொருகயல்கண்
மை எழுதாள்; பூவை பேணாள்
ஏண் அறியாள் எத்தனையும் எம்பெருமான்
திருவரங்கம் எங்கே? என்னும்
நாண்மலராள் நாயகனாய் நாமறிய
ஆய்பாடி வளர்ந்த நம்பி
ஆண்மகனாய் என் மகளைச் செய்தனகள்
அம்மனை மீர்! அறிகிலேனே!
பெரிய திருமொழி-5-5-5
திருமங்கை ஆழ்வார் தன்னை பரகால நாயகியாகவே பாவித்து அரங்கனை அனுபவித்தார். அரங்கனிடம் மனம் பறிகொடுத்த நாயகியின் துன்பத்தை கண்ட அவள் தாய்-பெருமாளை இவளோடு சேக்கவும் முடியவில்லை-இவளையும் நோவு படாமல் காக்கவும் முடியவில்லை என்று கலங்கி நிற்கின்றாள்.
என் மகள் தானே ஆபரணமாக இருக்கும் தனங்களின் மேல் சந்தனம் பூசிக்கொள்ளமாட்டேன் என்கிறாள்.கண்களில் மை எழுத மாட்டேன் என்கிறாள். பூச்சூட மறுக்கிறாள். வேறு பொருட்களின் மேல் நாட்டம் இல்லை. சதா என் சர்வேச்வரன் இருக்கும் திருவரங்கம் எங்கே? என்று சொல்லிக்கொண்டே இருக்கிறாள். இவளை இப்பாடு படுத்தும் தலைவன் யார் என்றால்-தாமரை பூவில் வாசம் செய்யும் பிராட்டிக்கு தலைவன்-ஆயர்பாடியில் வளர்ந்த என் நம்பி-பெரிய ஆண்பிள்ளையாக என் மகளுக்கு செய்தனவற்றை நான் அறிந்தேன் இல்லையே?
to be continued.....
R.Jagannathan.
No comments:
Post a Comment