Saturday, October 16, 2010

அரங்கமும், அரங்கனும்-6

அரங்கமும், அரங்கனும்-6



ஆழ்வார்கள் அரங்கனை அனுபவித்ததை நாமும் அனுபவித்துக்கொண்டு வருகிறோம்.அதோடு கூட நாயக நாயகி பாவனையில் ஆழ்வார்கள் அனுபவித்தை நாமும் அனுபவித்து அவர்களோடு கலந்துவிடுவோம்

முளைக்கதிரை, குறுங்குடியுள் முகிலை, மூவா
மூவுலகமும் கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பரிய ஆரமுதை, அரங்கம் மேய
அந்தணனை அந்தணர்தம் சிந்தை யானை
விளக்கொளியை, மரகதத்தை, திருத்தண் காவில்
வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன்பெற்றேன்; வருக என்று
மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே.
                                        திருநெடுந்தாண்டகம்.

அதிகாலை சூரியன் போல விளங்குபவன், திருக்குறுங் குடியுள் கார்மேகம் போல் தோன்றுபவன், மூவுலங்களையும் கடந்து அப்பால் நின்றவன், பரமபதத்தில் எழுந் தருளியிருப்பவன் , சகல கல்யாண குணங்களை உடையவன் திருவரங்கத்தே துயிலும் தூயன், அந்தணர் சிந்தனையில் உறைபவன், திருவெஃகாவில் விளக்கொளி  பெருமானாய் சேவை சாதிப்பவன், மரகதம் போல குளிர்ச்சியாய் இருப்பவன், பச்சை வண்ணன்- இவ்வாறு கிளி இனியனை பாடகேட்ட தலைவி-தான் வளர்த்த கிளி தனக்கு நல்ல பலனை இப்படி பாடி அளித்தற்காக அன்புடன் அழைத்து அதற்கு அஞ்சலியும் செய்து வணங்கினாள்.

மைவண்ணம் நறுங்குஞ்சிக் குழல்பிந்தாழ
மகரம்சேர் குழை இரு பாடு இலங்கி ஆட
எய்வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே
இருவராய் வந்தார், என் முன்னே நின்றார்
கைவண்ணம் தாமரை; வாய் கமலம் போலும்
கண் இணையும் அரவிந்தம்; அடியும் அஃதே
அவ்வண்ணத்து அவர்நிலைமை கண்டும் தோழீ!
அவரைநாம் தேவரென்று அஞ்சினோமே.
                                     திருநெடுந்தாண்டகம்


ஆழ்வார் நாயகி பாவத்தில்-தோழீ!! அரங்கன் எப்படி என் முன்னே வந்தார்-கறு நிற-நறுமணமிக்கதாய், சுருள்சுருளாக திருக்குழற் கற்றையானது பின்னே அலைந்தது; இரு புறத்திலும் மகரகுணடலங்கள் ஒளியுடன் அசைந்தன. வில்லை துணையாக கொண்டு-இந்த அழகிய கோலத்தோடு தாமும் தம் இளைய பெருமாளுமாக வந்தார். பேராவலோடு வந்தவர் கடல் கண்டு தேங்கினாற்போல என் எதிரில் நின்றார். அவர் கைகளோ செந்தாமரை போல அழகு மிக்கவை. வாயும் தாமரையை ஒக்கும். இரு கண்களும் அத்தாமரையே! திருவடிகளும் அவ்வண்ணமே

அப்படி வந்த பேரழகனை கண்டு அவரோடு கலந்து பரிமாறாமல் அவர் தேவர் என்று அஞ்சி விலகி நின்றேனே! நீ இல்லாததால் அத்தனையும் இழந்தேனே!

வையம் தகளியா, வார்கடலே நெய் ஆக
வெய்ய கதிரோன் விளக்கு ஆக-செய்ய
சுடர்- ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்- ஆழி நீங்குகவே என்று
                          பொய்கை ஆழ்வார்- முதல் திருவந்தாதி.

நம் இடர்களெல்லாம் போக்க கூடியவன்-அரங்கன் . அவன் முன் ஏற்றப்படும் விளக்கோ!
அந்த விளக்குக்கு பூமியே அகல்; அதை சுற்றியுள்ள கடலே நெய்; வெய்ய கதிரோன்- சூரியனே சுடர்- இவைகளேல்லாம் அவன் முன்னே ஏற்றப்படும் விளக்கானால் அவன் எத்துணை பெரியவன்.
இப்படி ஏற்றப்பட்ட விளக்கோடு அவன் திருவடிகளுக்கு மாலை சூடவேண்டாமோ!- இவ்வுலகில் உள்ள இடர்கடல் நீங்கவேண்டும் என்று சொற்களால் இப்பாமாலையை சாற்றினேன்.

அரங்கனுக்கு பாமாலை

அன்பே தகளியா, ஆர்வமே நெய் ஆக,
இன்பு உருகு சிந்தை இடுதிரியா-நன்பு உருகி
 ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன், நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்.
                                   பூதத்தாழ்வார்- இரண்டாம் திருவந்தாதி.


என்னுள்ளே பகவானை காணமுடியாமல் இருள்மண்டி கிடைக்கிறது. அந்த இருளை விலக்கி அவனை காண-
ஞானம் எனும் சுடர் விளக்கை-அதற்கு அன்பே அகல், ஆர்வமே நெய், மனமே திரி இவற்றை ஏற்றி, ஞானமாகிர ஆத்மா கரையப்பெற்று-பரம ஞானமாகிற சுடர் விடும் விளக்கை நாராயணனுக்கு -(அரங்கனுக்கு) ஏற்றினேன்.

திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன்; திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன்-செருக்கிளரும்
பொன் ஆழி கண்டேன்; புரி சங்கம் கைக் கண்டேன்
என் ஆழி வண்ணன்பால், இன்று.
                                         பேயாழ்வார்- மூன்றாம் திருவந்தாதி.

இப்படி இரு ஆழ்வார்களும் ஏற்றிவைத்த விளக்கின் வெளிச்சத்தில் பகவானை கண் குளிர பார்க்கின்றார்-மூன்றாவது ஆழ்வார்.
பெருமானிடத்தில் பிராட்டியை கண்ட ஆழ்வார்-அடுத்தது பொன் போல யாவரும் மயங்கும் அழகிய பகவானின் திருமேனியை காண்கின்றார். தாயாரும் பெருமாளும் ஜகத் ஜோதியாக மரகதமலையில் உதித்தெழும் பால சூரியனைப்போல  காண்கிறார்கள் . இந்த சேர்த்திக்கு திருஷ்டி படுமோ என்று காத்துவரும் திருவாழியையும்  , பாஞ்ச சன்னியம் என்னும் வலம்புரி சங்கையும் வணங்குகிறார்-ஆழ்வார்

அரங்கனுக்கு பாமாலை

R.Jagannathan.
                          

No comments:

Post a Comment