ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்யர்கள்- அகோபில மடம், பௌண்டரிகபுரம், பெரிய ஆண்டவன் போன்ற ஆஸ்ரம ஸ்வாமிகள்- ஸ்வாமி தேசிகனின் பகவத் த்யாந சோபானம், பாணாழ்வாரின்முனிவாஹந போகம்- இவற்றிற்கு நிறைய விரிவுரைகள் எழுதி இருக்கிறார்கள். இவைகள் இரண்டுமே அரங்கனை பற்றித்தான். வைகுண்ட ப்ராப்தி கிடைக்கவேண்டும் என்றால் அரங்கத்திற்கு வா- அரங்கனை சரணம் அடை என்று சேதநர்களான நம்மை கூவி அழைக்கிறார்கள். சுலபமாக நாம் கரையேற வழி காண்பிக்கிறார்கள். இதற்கு பக்தி யோகமோ, ஞானயோகமோ தேவையில்லை-அரங்கனை சரணம் அடைந்தாலே போதும்.
எனக்கு ரொம்ப நாளாக ஒரு ஆசை: ஸ்வாமி தேசிகன் ஆசார்யர். பாணாழ்வார்-ஆழ்வார். இவர்கள் இருவருமே 12-பாசுரங்களால் அரங்கனை அனுபவித்துள்ளார்கள்- திருவடி முதல் திருமுடி வரையிலும். நாமும் அரங்கனை பலதடவை அநுபவித்துள்ளோம். இவைகளுக்கு எப்படி வியாக்கியானம் அமைந்துள்ளது என்று சுவைக்க ஆசை.
1. அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன்* விண்ணவர்கோன் விரையார்பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதிளரங்க்த்தம்மான்
திருக் கமலபாதம்வந்து எங்கண்ணினுள்ளன ஒக்கின்றதே!
குற்றமற்றவனாய், எல்லா உலகங்களுக்கும் ஒரே காரணாய்; மஹாபரோபகாரனாய் பாகவதற்கு; அடியேனை தாஸனாக்கிய; எப்போதும் எவ்வகை குற்றமற்றவனாய்; நித்யசூரிகளுக்கு தலைவனாய்;மணம் நிறைந்த சோலைகளுடைய; திருமலையில் நிற்பவனாய்; அடியார்க்கு வசப்பட்டவனாய்; அடியார்களின் குற்றத்தை காணாதவனாய்; நீதியை நடத்தும் பரமபதத்தில் இருப்பவனாய்; நீண்ட மதிள்கள் கொண்ட திருவரங்கத்தில் பள்ளி கொண்ட என் ஸ்வாமியின் பெருமையுடைய தாமரை போன்ற திருவடிகள் தானே வந்து என் கண்ணுக்குள்ளே அகப்பட்டு அருகே நிற்கின்றன.
திருப்பாணாழ்வார். அமலநாதிபிரான்
1. அந்தர் ஜ்யோதி: கிமபி யமிநாம் அஞ்ஜநம் யோக த்ருஷ்டே:
சிந்தா ரத்நம் ஸுலப மிஹ ந: ஸ்த்தி மோக்ஷாநுரூபம்
தீநா நாத வ்யஸநசமநம் தைவதம் தைவதாநாம்
திவ்யம் சக்ஷு: ச்ருதிபரிஷதாம் த்ருச்யதே ரங்கமத்யே //
அரங்கத்திலே ஜோதிவடிவாய் ஓர் ஆச்சர்ய வஸ்து- யோகிகளின் இருதயத்தில் பிரகாசிக்கின்றதாய், ஞான கண்ணுக்கு மை போன்றதாய், இவ்வுலகில் நமக்கு எளியதான இம்மை போகங்கள், மோக்ஷம் இவைகளை தரவல்ல சிந்தாமணி போன்றதாய், அசக்தர்களுடையவும், அநாதர்களுடையவும் துன்பத்தை ஒழிப்பதாய்; வேதராசிகளுக்கு தெய்வீக கண்போன்றதாய்; எல்லா தெய்வங்களுக்கும் மேற்ப்பட்ட தெய்வமாய் ஒரு வஸ்து திருவரங்கத்தின் நடுவில் காணப்படுகிறது
ஸ்வாமி தேசிகன்.ஸ்ரீ பகவத் த்யாந ஸோபாநம்
சேதனர்கள்
நாம் ஸ்ரீரங்கத்திற்கு காலடி வைத்ததும் ஓடி சென்று காவேரியில் நீராடி அரங்கனை காண விரைகிறோம். நம் சிந்தனையெல்லாம் அரங்கனின் அழகை காண துடிக்கின்றன. கால் கடுக்க நின்று திருமாமணி மண்டபம் நுழைந்த உடனே அரங்கனை காண்கின்றோம். ஆகா என்ன அழகு. நிற்கும் சில நிமிஷங்களில் பெரிய பெருமாள் திருவடி முதல் திருமுடி வரையில் சேவிக்கின்றோம், கூடவே அழகிய மணவாளனையும் உபய நாச்சிமார்களையும் காண்கின்றாம்-திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே அவனின் அழகை மறுபடியும் காண துடிக்கின்றோம். வெளியில் வந்தவுடனேயே அந்த காட்சி மறைந்துவிடுகிறது. இன்னும் சரியாக சேவிக்கவில்லையே என்று ஏங்குகிறாம்!
இந்த அனுபவம் எல்லோருக்கும்-இதில் பேதமே கிடையாது, ஆண், பெண் என்ற வித்யாசம் கிடையாது, ஏழை, தனவான் என்ற பேதம் கிடையாது, ஜாதி வித்யாசம் கிடையாது. நம் எல்லோரையும் அணைத்து ஒன்று சேர்க்கும் அரங்கனின் கருணையே கருணை.
2. உவந்த உள்ளத்தனாய் உலகமளந்து அண்டமுற
நிவந்த * நீன்முடியன் அன்று நேர்ந்த நிசாசரரை *
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்தம்மான்* அரைச் சிவந்த ஆடையில் மேல் சென்றதாம் என் சிந்தனையே.
ஆழ்வார் கமல பாதத்தை தரிசனம் செய்துவிட்டு தன் கண்களை அரங்கன் அணிந்திருக்கும் பட்டு பீதாம்பரத்தில் செல்ல விடுகின்றார்.அப்போது அவர் சிந்தையில் பகவானுடைய திருவிக்ரம அவதாரம் காண்கிறது. மூவடி நிலம் வேண்டி பலியின் செறுக்கை அழித்து இந்திரர்களுக்கு ராஜ்யத்தை மீட்டு கொடுத்த காட்சி, பிரம்மன் அவனுடைய திருவடிக்கு கங்கையின் நீரால் அபிஷேகம் செய்த காட்சியும் அந்த நீர் சிவன் தலையில் தாங்கி கொள்ள-அப்படி வளர்ந்த பெருமான் யாரும் கேட்காமலேயே நம் எல்லோருடைய தலையிலும் வைக்கிறான். அவன் திருவடி மேலே போக போக அவனுடைய கிரீடமும் வளர்கின்றது மேலே ஒருபொன்னான குடையை கவிழ்த்ததுபோல் விளங்கியது. தேவர்கள் இழந்த இடங்களை மீட்டு கொடுத்த அந்த எம்பெருமான் சோலைகள் சூழ் அரங்கத்திலே கோயிலாழ்வாருக்குள்ளே கண் வளர்ந்தருளுகிறான். அவன் திருவரையில் அணிந்திருக்கும் சிவந்த ஆடை-அசுரர்களை அழித்தபோது தெறிக்கப்பட்ட இரத்த கரை பட்டு சிவந்ததோ! அனாதி காலமாக பெண்களின் ஆடைமீதே சென்ற என் மனம் இப்பொழுது அரங்கன் திருவடியை கண்டு அனுபவித்துக்கொண்டே அவன் பட்டு பீதாமபரத்தில் போய் நின்றுவிட்டது.
திருப்பாணாழ்வார். அமலநாதிபிரான்
2. வேலாதீத ச்ருதி பரிமளம் வேதஸாம் மௌளி ஸேவ்யம்
ப்ராதுர்ப்பூதம் கநக ஸரித: ஸைகதே ஹம்ஸ ஜூஷ்டே
லக்ஷ்மீ பூம்யோ: கர ஸரஸிஜைர் லாலிதம் ரங்கபர்த்து:
பாதாம்போஜம் ப்ரதிபலதி மே பாவநா தீர்க்கிகாயாம் //
எல்லையை கடந்த வேதங்களின் பரிமணம் வீசப்பெற்றதாய் ப்ரம்ம தேவர்களின் முடிகளால் வணங்கப்பெற்றதாய் அன்னங்கள் விரும்பி உறைகின்ற காவரி ஆற்று மணல் திட்டில் தோன்றியதாய் பெரிய பிராட்டி, பூமிதேவி இவர்களின் திருக்கை தாமரைகளால் வருடபெற்ற அரங்கனுடைய திருவடி தாமரை அடியேனுடைய நினைவென்னும் பொய்கையில் என்றும் நிலையானதாக நிற்கின்றது.
ஸ்வாமி தேசிகர் -பகவத் த்யாந ஸோபாநம்
சேதநர்கள்:
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி ப்ரதி வருஷம் மார்கழி மாதத்தில் வரும். அப்போது அரங்கனுக்கு அத்யயந உத்ஸவம்- பகல் பத்து, ராப்பத்து - 22- நாட்கள் நடைபெறும். பகல் பத்தில் அர்ஜுன மண்டபத்திலும், ராப்பத்து திருமாமணி-ஆயிரங்கால் மண்டபத்திலும் பெருமாள் ஏளியிருப்பார்.ஒவ்வொரு நாளும் பெரிய பெருமாளுக்கும், நம்பெருமாளுக்கும் அலங்காரம் காண கண்கொள்ளா காட்சி.
பெரிய பெருமாள் வைகுண்ட ஏகாதசி தினத்திற்கு முதல் நாள் தசாவதார பட்டு பீதாம்பரம் சார்த்திக்கொண்டு பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். இடுப்பில் அழகான ஒட்டியானம் திருவடியோ தங்க தாமரை. பார்க்க பார்க்க திகட்டாத அமுதன்.ச் வெளியில் செல்லும்போதும் அவனை பார்த்துக்கொண்டே தான் பக்தர்கள் வருவார்கள். ஆழ்வார், ஆச்சார்யர் அனுபவித்த பெருமாள் அல்லவா!
மந்திபாய் வடவேங்கடமாமலை* வானவர்கள்
சந்திசெய்யநின்றான் அரங்ககத்தரவினணையான்
அந்திபோல் நிறத்தாடையும் அதன்மேலயனைப் படத்ததோரெழில்
உந்திமேலதன்றோ அடியேனுள்ளத்தினுயிரே //
ஆழ்வாரின் மனது அடுத்து பெருமாளின் திருவந்தியை நோக்கி செல்லுகின்றது. குரங்குகள் கிளைக்கு கிளை பாயுமிடமாய் திருவேங்கடமென்னும் பெரிய திருமலையில் முக்தரும், நித்யரும் கைங்கர்யங்களை ஏற்றுக்கொள்ளும்படி நின்றவனாய், திருவரங்கத்தில் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டுள்ளவனான பெரிய பெருமாள், செவ்வானம் போல் நிறத்தையுடைய பீதாமபரமும் அதற்கு மேல் பிரமனை படைத்ததாய் ஒப்பற்ற அழகையுடைய திருவந்தியை இலக்காக கொண்டதன்றோ என்னுடைய மனதில் பிரகாசிக்கின்ற இனிய ஆத்மா, பிராணன் எல்லாம்.
திருப்பாணாழ்வார்-அமலநாதிபிரான்
சித்ராகாரம் கடக ருசிபி: சாரு வ்ருத்தா நுபூர்வாம்
காலே தூத்ய த்ருததர கதிம் காந்தி லீலா களாசீம்
ஜாநுச்சாயா த்விகுண ஸுபகாம் ரங்கபர்த்துர் மதாத்மா
ஜங்காம் த்ருஷ்ட்வா ஜநந பதவீஜாங்கிகத்வம்ஜஹாதி //
ஸ்வாமி தேசிகன்-பகவத் த்யான சோபானம்
ஆசார்யர் -அரங்கன் திருவடியிலிருந்து அரங்கன் கணுக்காலுக்கு தன் மனதை செலுத்துகிறார்.
பகவானின் கால் தண்டைகளின்-ஒளிகளாலே பல வர்ணங்களை வீசி வட்டமாய் அழகான் அமைப்பை கொண்டதாக-எப்போதும் பக்தர்களை காக்க தயாரான நிலையில்( பாண்டவருக்காக தூது சென்ற காட்சி ) முழந்தாளின் எழிலால் அழகு பலமடங்கு பெருகி அரங்கனின் கணுக்காலை ஸேவித்து தன்னை ஸம்ஸார மார்க்கத்திலிருந்து திருப்பி அவன் அடியில் திருப்பிவிடும்-அப்படிப்பட்ட பெருமை வாய்ந்தது-கணக்கால்.
( அரங்கனது கணைகாலை ஸேவித்தால்-தான் படும் துன்பங்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்கிறார் ஸ்வாமி தேசிகர்.
சேதனன்:
ஜ்யேஷ்டாபிஷேகம் முடிந்தவுடன் அரங்கனின் நகை எல்லாம் புதுப்பித்து அரங்கனுக்கு சாத்துவார்கள். பெரிய பெருமாள் அப்போது கணுக்காலில் பெரிய தண்டை சாத்தியிருப்பார். திருவடியோ தங்கம். இரண்டும் சேர்ந்து நம் கண்ணை விட்டு அகலாது பதிந்துவிடும். பகவானை நாம் அனுபவித்தமாதிரி ஆழ்வார்களும் ஆசார்யர்களும் அனுபவித்திருக்கிறார்கள் என்று நினைக்கும்போது நமக்கு மயிர் கூசுகிறது. காலம் காலமாக இதே நிலையில் பகவான் நம் பிதா, பாட்டனார் என்று ஏழேழு தலைமுறைக்கும் காட்சியளித்து கடை தேற்றியுள்ளார்.
R.Jagannathan.
No comments:
Post a Comment