Tuesday, October 26, 2010

அரங்கமும், அரங்கனும்- 8


அரங்கமும், அரங்கனும்- 8

           
சதுரமாமதிள்சூழ் இலங்கைக்கிறைவன் தலைபத்து
உதிரவேட்டி* ஓர் வெங்கணையுய்த்தவன் ஓதவண்ணன்*
மதுரமா வண்டுபாட மாமயிலாடரங்கத்தம்மான்*
உதரபந்தம் என்னுள்ளத்துள் நின்று உலாகின்றதே.

வலியமான பெரிய மதிள்சூழப்பெற்ற இலங்கை நகருக்கு அரசனான ராவணன் தலை பத்தும் உதிரும்படியாக ஓர் கொடிய அம்பை ஓடவிட்டு பிழைப்பித்தவனாய்; கடல் போன்ற நிறமுடையவனாய் இனிய பெரிய வண்டுகள் இனிமையாக பாட, பெரிய மயில்கள் நடனம் புரிய-கண் வளர்ந்தருளுகிற- அரங்கன் திருவயிற்றின் மேல் அணியப்பட்ட ஒட்டியானம் ( அரைப்பட்டை ) நிலையாய் நின்று லீலைகள் புரிகின்றது.

எம்பெருமான் கயிற்றில் கட்டப்பட்ட திருவயிற்றை சேவித்தால் ஸம்ஸார பந்தம் நீங்கி மோக்ஷத்தை தருபவன் அரங்கன்.
                                                         திருப்பாணாழ்வார்- அமலநாதிபிரான்

காமாராம ஸ்த்திர கதளிகா ஸ்தம்ப ஸம்பாவநீயம்
க்ஷொமாச்லிஷ்டம் கிமபி கமலா பூமி நீளோபதாநம்
ந்யஞ்சத் காஞ்சி கிரண ருசிரம் நிர்விசத்யூரு யுக்மம்
லாவண்யௌக த்வயமிவ மதிர் மாமிகா ரங்கயூத: //

மன்மதனது தோட்டத்தில் உறுதியாயுள்ள வாழை மரக்கட்டைகள் போல நினக்க உரியதாய், பீதாம்பரத்தை அணிந்தாய்; பூமி பிராட்டி, நீளை பிராட்டி, பெரிய பிராட்டி- இவர்களுக்கு தலை அணியாய், வீசும் மேகலை போல மிக அழகான, அற்புதமான அரங்கன் என்னும் வாலிபன் இரு தொடைகளை என் புத்தி அனுபவிக்கின்றது

                                                              ஸ்வாமி தேசிகன்- பகவத் த்யான சோபானம்
சேதனன்:

பகவானின் திருவடியை சேவித்துவிட்டு, அவன் கால் தண்டையையும், திரு ஒட்டியாணத்தை காண மனம் தவிக்கின்றது. இந்த நிலையில் பகவானின் அழகிய பட்டு பீதாம்பரம் அணிந்த இரு தொடைகளும் நம் முன்னே நிற்கின்றன. அவை தான் என்ன அழகு-வாழை குறுத்து போல் நீண்டு, காவேரி இரு கிளைகளாக பிரிந்து ஓடுவது போல அற்புதமான காட்சி. திருமகளும் நில மகளும் இந்த தொடையை தானே தலை அணியாக வைத்து சற்று கண் அயர்கிறார்கள்.

இடுப்பில் அணியபெற்றிருக்கும் பட்டை பலவிதமான கற்களாலும் தங்கத்தாலும் செய்யப்பட்டது. அவன் இதை அணிந்திருக்கும் அழகு நம்மை கிருஷ்ணாவதாரத்திற்கு இழுத்து செல்லுகிறது. கண்ணன் எங்கும் ஓடிவிடாதபடி அவனை யசோதை கயிற்றால் கட்டி வைப்பாள். அந்த கயறு அழுந்தி கண்ணன் இடுப்பில் தழும்பு காணும்- அதை காணும்போது யசோதை அழுதுவிடுவாளாம்-கன்ணனுக்கு எப்படி வலி உண்டாகி இருக்கும் என்று நினைத்து. அரங்கனின் இந்த அழகு தோற்றம் நம்மை ஈர்ந்துவிடுகிறது.

5. பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத் தன்
வாரமாக்கிவைத்தான் வைத்தன்றி எண்ணுள் புகுந்தான்
கோரமாதவம்செய்தனன் கொல் அறியேன் அரங்கத்தம்மான் திரு
வாரமார்பதன்றோ அடியேனை ஆட்கொண்டதே.
                                                         திருப்பாணாழ்வார்அமலநாதிபிரான்

பெரும் சுமைகளான பழமையான என் பாபங்ககளை வேரறுத்து என்னை தனக்கு அடியனாக ஆக்கினான். அப்படிசெய்ததன்றி என் உள்ளத்தில் புகுந்தான். இப்படி தன்னை பற்றுமாறு நிற்பதில்லை எம்பெருமான். அனாதிகாலமாக நான் வழி தப்பி கொடிய பாபங்களையே செய்ததால் அவன் என்னை இழந்துவிட்டான். ஆனாலும் என்னை மீண்டும் பெறுவதற்கு அவனுக்கு ஆசை. அதற்காக கோர தவமும் செய்ய துணிந்தான். அதற்கு இடமாக காவேரி பாயும் திருவரங்கத்தை கொண்டான்.

இப்படி அற்பமான என் விஷயத்தில் கருணை கொண்டவன் எப்படிப்பட்டவன்? கணப்பொழுதும் பிரியாத பெரிய பிராட்டி அமரும் திருமார்பையுடையவன்-திருவரங்கன். அந்த திருமார்பு என்னை அடிமையாக்கி கொண்டதே- தாஸனாக்கி கொண்டதே!

5. ஸம்ப்ரீணாதி ப்ரதிகலமஸௌ மாநஸம் மே ஸுஜாதா
    கப்பீரவாத் க்வசந ஸமயே கூடநிக்ஷிப்த விச்வா
   நாளீகேந ஸ்ப்புரித ரஜஸா வேதஸோ நிர்மிமாணா
   ரம்யாவர்த்த த்யுதி ஸஹசரீ ரங்கநாதஸ்ய நாபி: //

அழகிய தோற்றமுடையதாய், ஆழமாயிருப்பதாய், உலகத்தையே ஒரு சமயம் தன்னுள்ளே அடக்கிகொண்டதாய், தூள்கள் மிளிர பெற்றதாய்,தாமரைப்பூவால் பிரமனை படைத்தாய், அழகிய சுழல்களுடன் விளங்குகின்ற திருவரங்கனது நாபி கமலம் என்னுள்ளத்தே புகுந்து மகிழசெய்கின்றது .

                                                               ஸ்வாமி தேசிகன்- பகவத் த்யான சோபானம்.

சேதநர்கள்:

 அரங்கன் யோக நித்திரை செய்யும்போது அழகாக நம்மை பார்த்துக்கொண்டு சயனித்திருப்பான். மார்பில் திருமகளோடு அழகிய திருவாபரணம். அந்த திருவாபரணத்துக்கும், அரை சிவந்த ஆடை அதன்மேல் பட்டை- இவ்விரண்டிற்கும் இடையில் அரங்கனது நாபி கமலத்தை காணலாம். திருமகளின் கருணையும், பட்டை மிளிரும் ஜோதியும் பட்டு நாபி கமலம் பல  மடங்கு பிரகாசித்து நம் உள்ளத்தை தூய்மையாக்குகிறது.

6.துண்டவெண்பிறையன் துயர்தீர்த்தவன்* அஞ்சிநிறைய
   வண்டுவாழ்பொழில்சூழ் அரங்கநகர்மேய அப்பன்
   அண்டரண்டபகிரண்டத்து ஒருமாநிலமெழுமால்வரை* முற்றும்
  உண்டகண்டம்கண்டீர் அடியேனை உய்யக்கொண்டதே!

சிறிது பகுதியான தலையில் வெண்மையான சந்திரனை தாங்கிகொண்டிருக்கும் பரமசிவன் துக்கத்தை போக்கியவனாய் அழகிய சிறகுகள் உடைய வண்டுகள் வாழ்கின்ற சோலைகள் சூழ்ந்த ஸ்ரீரங்கத்திலே நித்ய வாசம் செய்கின்ற- உலகுக்கெல்லாம் தந்தையான அரங்கன் அண்டத்துக்குட்பட்ட தேவர்களையும், அண்டங்களையும், அதற்குட்பட்ட ஆவரணங்களையும் விசாலமான பெரிய பூமியையும், ஏழுகுல பர்வதங்ககைளையும், மற்றும் சகலத்தையும் விழுங்கிய திருக்கழுத்து அடியேனை உஜ்ஜீவிக்க செய்கிறது.
                                                                                        திருப்பாணாழ்வார்- அமலநாதிபிரான்.

6. ஸ்ரீவத்ஸேந ப்ரதித விபவம் ஸ்ரீபத ந்யாஸ தந்யம்
    மத்யம் பாஹ்வோர் மணிவர ருசா ரஞ்சிஜிதம் ரங்கதாம்ந:
    ஸாந்த்ரச் சாயம் தருண துளஸீ சித்ரயா வைஜயந்த்யா
   ஸந்தாபம் மே சமயதி திய: சந்த்ரிகோதார ஹாரம் //

ஸ்ரீ வத்ஸம் என்னும் மறுவினால் விளங்குவதால் , பெரிய பிராட்டி திருவடி வைப்பதால் பாக்கியம் பெற்றதாய், கௌஸ்துபம் என்னும் ரத்னத்தால் செந்நிறமாக்க பெற்றதாய், பசுமையான திருத்துழாயினால் பல வர்ணங்கொண்ட வைஜயந்தி வனமாலையால் குளிர்ந்த ஒளி மிகுந்ததாய், அழகிய முத்து மாலையுடையதாயுள்ள, அரங்கனின் இரு தோள்களுக்கு இடையில் உள்ள திருமார்பு என் உள்ளத்தின் தாபத்தை ஒழிக்கின்றது.
                                                                         ஸ்வாமி தேசிகன்- பகவத் த்யான சோபானம்

 சேதனன்:

அரங்கனை ஒரு நிமிஷ அவகாசத்தில் சேவித்தாகவேண்டும். திருவடியிலிருந்து அழகான பட்டை-( ஒட்டியானம் ) வரை சேவித்தாயிற்று. அன்று அரங்கனுக்கு பெரிய ஆபரணம் கழுத்திலிருந்து பட்டை வரை சாத்தியிருந்தார்கள். பரந்த விசாலமான தோள்கள். ஆபரணத்தை ஒட்டி பெரிய வைஜயந்தி மாலை. திருமார்பிலே பெரிய பிராட்டியார்- பிராட்டி இல்லாமல் பகவான் இருக்கமாட்டான்-இணைபிரியாத தம்பதிகள். நம் கண் அகல மறுக்கின்றது- சாத்தான் தள்ளினாலும் நகர மறுக்கின்றது நம் கண்கள்.

7. கையனார்சுரிசங்கனலாழியர் நீள்வரைபோல்
    மெய்யனார் துளபவிரையார் கமழ்நீள்முடி எம்
    ஐயனார் அணியரங்கனார் அரவிணைமிசைமேயனார்*
   செய்யவாய் ஐயோ! என்னைச்சிந்தைகவர்ந்ததுவே.

திருக்கையில் ஒரு பக்கம் வலம்புரி சங்கையும், மறுகையில் தீய் உமிழ்கின்ற சக்கிரத்தை உடையவனாய் பெரிய மலை போன்ற திருமேனியுடையவனாய், திருத்துழாய் மணம் மிகும்படி-நீண்ட கிரீடத்தை தரித்தவனாய் எனக்கு தந்தையான திருவரங்கத்தில் உள்ளவனாய், ஆதி சேஷன் மீது பள்ளிகொண்டவனாய், ஆச்சர்யமானவரான அரங்கனின் சிவந்த திருவாய் என் சிந்தையில் புகுந்து கவர்ந்துகொண்டது என்ன அதிசயம்!

                                                                                       திருப்பாணாழ்வார்-அமலநாதிபிரான்.

7. ஏகம் லீலோபஹிதமிதரம் பாஹு மாஜாநு லம்பம்
    ப்ராப்தா ரங்கேசயது ரகில ப்ரார்த்தநா பாரிஜாதம்
    த்ருப்தா ஸேயம் த்ருட நியமிதா ரச்மிபிர் பூஷணாநாம்
   சிந்தா ஹஸ்திந் யநுபவதி மே சித்ரமாலாந யந்த்ரம். //

திருவரங்கத்தில் பள்ளிகொண்ட- எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றவல்ல- அரங்கனுடைய வல கையை தலையணியாக்கிகொண்டு, மற்றொரு கை முழந்தால் வரை நீண்டு- இதைகண்ட என் நினைவென்னும் பெண் யானை இருமார்புடன்-திருவாபரணங்களின் ஒளியால் கட்டப்பட்டு அவனின் அழகை அநுபவிக்கிறது.

                                                                            ஸ்வாமி தேசிகன்-பகவத் த்யாந ஸோபாநம்.

சேதனன்:

ஒரு மணி நின்று ஒருவழியாக திருமாமணி மண்டபத்துக்குள் நுழைந்து கற்ப க்ரஹத்தில் உள்ளே அரங்கனை காண விழைந்தேன். சந்நதி முன்னே அரங்கனை அர்ச்சா மூர்த்தியாக-அழகிய மணவாளனாக கண்டேன். காண கண் கொள்ளா காட்சி. அடுத்து என் கண் பெரிய பெருமாள்  பேரில் சென்றது. கம்பீரமான திருமுகம். ஒரு சிறிய புன்னகை. வைத்த கண் எடுக்கமுடியவில்லை. அனாதிகாலமாக இப்படியே தான் நம் முன்னோர்களுக்கும்-ஆசார்யர்களுக்கும், ஆழ்வார்களுக்கும் அரங்கன் சேவை சாதித்துக்கொண்டிருக்கின்றான். அவர்கள் கோஷ்டியில் நானும் சேர்ந்திருக்கின்றேன் என்று நினைக்க பெருமிதமாயிருந்தது.

R.Jagannathan.




No comments:

Post a Comment