Tuesday, October 12, 2010

அரங்கமும், அரங்கனும்-5

அரங்கமும், அரங்கனும்



திருமங்கை ஆழ்வார் பகவானோடு நாயகி பாவத்தில் அருளி செய்த பாசுரங்கள் நம்மையும் ஒன்றர கலந்துவிட செய்கின்றன. பக்தர்கள் பகவானை காணாமல் தவிக்கும் தவிப்பே ஏக்கமாக வெளிவருகிறது.

பந்தோடு கயல் மருவாள்; பைங்கிளியும்
   பாலூட்டாள்; பாவை பேணாள்;
வந்தானோ திருவரங்கன், வாரானோ?
   என்றென்றே வளையும் சோரும்
சந்தோகன் பௌழியன் ஐந் தழல் ஓம்பு
   தைத்திரியன் சாம வேதி,
அந்தோ! வந் தென்மகளைச் செய்தனகல்
   அம்மனை மீர்! அறிகிலேனே.


                                       பெரிய திருமொழி-5-5-9
தாய்மார்களே!
விளையாடிக்கொண்டிருந்த இவள் இப்போது பந்தையும், கழற்காயையும் விரும்புவதில்லை. அவள் ஆசையாக வளர்த்துவரும் பைங்கிளிக்கு பாலூட்டவில்லை. சதா அரங்கன் தான்-அழகிய மணவாளன் வந்தானே என்று பிதற்றல்-அவன் வரவில்லையே நான் என்ன செய்வேன்-என் கைவளைகள் நழுவுகின்றதே என்று சோர்ந்து போகிறாள்.

பெண்களே! சாந்தோக்கியம், தைத்திரியம், சாமம் எல்லாம் அறிந்தவன், அதற்கு பொருளாய் இருப்பவன், பஞ்ச வேள்விகள் செய்பவனுமான எம்பெருமான் என் மகளை படுத்துவதை நான் அறியவில்லையே!

பொய்வண்ணம் மந்த்தகற்றப் புலன் ஐந்தும் செலவைத்து
மெய்வண்ணம் நினைந்தவர்க்கு மெய்நின்ற வித்தகனை
மைவண்ணம் கருமுகில்போல் திகழ்வண்ணம் மரகத்தின்
அவ்வண்ண வண்ணனை யான் கண்டது-தென்னரங்ககத்தே
                                                                   பெரிய திருமொழி-5-7-2-


பெருமாள் நித்திய சூரிகளை தன்னிடத்தே வைத்து அவர்களுக்கு பரமானந்தத்தை கொடுக்கிறார். அவ்வண்ணமே தன்னையும் அனுபவிப்பதற்காக திருவரங்கத்தில் உறைகின்றான் என்று ஆழ்வார் இப்பாசுரத்தில் சாதிக்கிறார்.

இந்த உலக மாயையிலிருந்து மனத்தை அகற்றி ஐம்புலங்களையும் அங்கும், இங்குமாக அலையவிடாமல், அரங்கனையே சிந்திப்பவர்களுக்கு தன்னையே காட்டி அருள்வான் அரங்கன். அவன் அஞ்சன வண்ணன், காளமேகம் போலவும், மரகதம் போலவும் நிறம் படைத்தவன். அவனை அரங்கத்திலேயே கண்டு களிப்புற்றேன்.

பிண்டியார் மண்டை ஏந்தி
   பிறர்மனை திரிதந்து, உண்ணும்
முண்டியாள் சாபம் தீர்த்த
   ஒருவன் ஊர், உலகம் ஏத்தும்
கண்டியூர், அரங்கம், மெய்யம்
   கச்சி, பேர், மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால்
   மற்றையார்க்கு உய்யல் ஆமே?
                                திருக்குறுந் தாண்டவம்- 

பெருமாள் உகந்து உறையும் திவ்ய தேசங்கள் பல. அவன் எப்பேற்ப்பட்டவன்- தலையோட்டை கையில் ஏந்தி அயலார் வீட்டில் இரந்து உண்ணுகிற-தவக்கோலம் பூண்ட பரம சிவனுக்கு சாபம் தீர்த்தவன்- எம்பெருமான். அவன் உறையும் திருப்பதிகள்-கண்டியூர், அரங்கம், திருமெய்யம், திருகச்சி, திருப்பேரூர், திருக்கடல் மல்லை- இங்கு இவைகளை பற்றினவர்கள் உய்வு பெறலாமே தவிர மற்றையோர் உய்ய வழி இல்லை.

வைய்யம் தகளியா, வார்கடலே நெய் ஆக
வெய்ய கதிரோன் விளக்கு ஆக-செய்ய
சுடர்- ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர் ஆழி நீங்குகவே என்று
                                              பொய்கை ஆழ்வார்-முதல் திருவந்தாதி


நம்முடைய புற இருளை மாற்றக்கூடிய ஒரு விளக்கினால் அரங்கனை அறிந்து கொண்டேன். அந்த விளக்கிகாகிய- அகல் - பூமிக்கு  நெய்யாகிய - கடல் - ஊற்றி- சூரியனாகிய வெய்ய கதிரோன்- சுடர்- இப்படி விளக்கேற்றிய அவன் திருவடிகளுக்கு சொல் என்ற மாலையை சூட்டி-அந்த சக்கிர படையை ஏந்தியவனின் திருவடிகளை வணங்கி இவ்வுலகில் உள்ள இடர்கள் நீங்கவேண்டும்- என்று இறைஞ்சுகிறார் ஆழ்வார். சகல வியாதிகளையும் தீர்க்கும் அரு மருந்து பகவானின் திருவடிகளே!

ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனைநான்
இன்று மறப்பேனோ ஏழைகாள்? அன்று
கருஅரங்கத் துட்கிடந்து கைதொழுதேன் கண்டேன்
திருவரங்கன் மேயான் திசை.


அரங்கன் எனக்கு செய்த நன்மைகள் எத்தனையோ! அவைகள் ஒன்றையும் நான் மறக்கமுடியுமா- ஆழ்வார் ஏற்றிய சொல் மாலையில் ஏற்றீ வைத்த விளக்கினால்- அந்த ஒளியினால் பெருமானை அரங்கத்திலே கரு மண்டபத்திலே பொன்போல் விரும்பத்தக்க அழகிய திருமேனியை கண்டேன்.

R.Jagannathan.

No comments:

Post a Comment